அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 6 பெண் வேட்பாளர்கள் போட்டி இடைத்தேர்தலில் 3 பேருக்கு வாய்ப்பு
நாடாளுமன்ற தேர்தலில் 6 பெண் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இடைத்தேர்தலில் போட்டியிட 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்த வண்ணம் உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நேற்று முன்தினம் ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராக கொண்ட அ.ம.மு.க. கட்சியின் முதல் பட்டியலும் வெளியாகி இருக்கிறது.
தே.மு.தி.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. அ.தி.மு.க.வில் ஒரு பெண் வேட்பாளருக்கும் (காஞ்சீபுரம்-மரகதம் குமாரவேல்), தி.மு.க. 2 பெண்களுக்கும் (தூத்துக்குடி-கனிமொழி, தென் சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன்) நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க. சார்பில் 3 பெண்கள் (திருச்சி-சாருபாலா தொண்டைமான், நாகப்பட்டினம்-செங்கோடி, தென்காசி (தனி)-பொன்னுதாய்) களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்.
6 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். அவ்வாறு அவர் அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை 7 ஆக உயரும்.
அதேநேரத்தில், தே.மு.தி.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் பெண் வேட்பாளர்கள் இடம் பெறவில்லை.
சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட 2 பெண்களுக்கு (ஒசூர்-ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி, நிலக்கோட்டை-எஸ்.தேன்மொழி) அ.தி.மு.க. வாய்ப்பளித்துள்ளது. அ.ம.மு.க.வில் ஒரு பெண்ணுக்கு (குடியாத்தம்-ஜெயந்தி பத்மநாபன்) போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தி.மு.க. சார்பில் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story