விடைத்தாளை கவனக்குறைவாக திருத்தும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் பிளஸ்-2 தேர்வும், 22-ந் தேதியுடன் பிளஸ்-1 தேர்வும், 29-ந் தேதியுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் முடிகிறது.
மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கான 70 மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இதில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்பாடங்களான விடைத்தாள் திருத்தும் பணியானது முதன்மை விடைத்தாள் தேர்வாளர்கள் மூலம் வருகிற 29-ந் தேதியுடன் தொடங்க உள்ளது. பிற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 30-ந் தேதி முதல் ஏப்ரல் 11-ந் தேதி வரையில் உதவி விடைத்தாள் தேர்வாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிலையில் உதவி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் மறுகூட்டல், மறுமதிப்பீடு போன்றவற்றின்போது ஏதாவது தவறுகள் கண்டுபிடிக்கப்படும். கவனக்குறைவுடன் விடைத்தாள்கள் திருத்தியதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் (உதவி தேர்வாளர்கள்) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உதவி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு காலை சரியாக 8.30 மணிக்கு மைய மதிப்பீட்டு முகாமுக்கு வரவேண்டும். முதன்மை தேர்வாளரிடம் விடைத்தாள் கட்டை பெற்றுக்கொண்டு, பகிர்மான பதிவேட்டில் பதிய வேண்டும்.
* உதவி தேர்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டில் சரியான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும். கட்டின் மேல்பக்கத்தில் தனது பதிவு எண், தேதி, பிரிவுவேளை என குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும்.
* விடைத்தாளின் அனைத்து பக்கங்களும் சரியாக இருக்கின்றதா? என சரிபார்க்க வேண்டும். குறைகள் இருந்தால் முதன்மை தேர்வாளரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுவர வேண்டும்.
* விடைத்தாளில் உள்ள குறைபாடு குறித்து முதன்மை தேர்வாளர்களின் கவனத்துக்கு கொண்டு வராவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு உதவி தேர்வாளர்களே முழு பொறுப்பு.
* சிவப்பு நிற மை கொண்டு மட்டுமே மதிப்பீட்டு பணியை தொடங்க வேண்டும்.
* விடைக்குறிப்பின் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்பட வேண்டும். விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச மதிப்பெண்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* எல்லா பக்கங்களிலும் விடைகளும் எதுவும் விடுபடாமல் முழுவதும் சரியாக திருத்தப்பட வேண்டும்.
* விடைத்தாளின் கடைசி வரியில் தேர்வுத்துறை முத்திரை அச்சிடப்பட்டு உள்ளதா? என்று சரிபார்த்த பின்பே உதவி தேர்வாளர்கள் மதிப்பீட்டு பணியை தொடங்க வேண்டும்.
* மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு எழுதாத பக்கங்களுக்கு குறுக்கு கோடு இடவேண்டும். விடை எழுதாமல் வினா எண் மட்டுமே எழுதியிருந்தால் சிவப்பு மையினால் கோடிட வேண்டும். புவியியல், வரலாறு, வணிக கணிதம் ஆகியவற்றில் உள்ள இணைப்புகள் விடுபடாமல் கண்டிப்பாக பார்த்து திருத்தவேண்டும்.
* மதிப்பெண்ணை முதல் பக்கத்தில் அதற்குரிய கட்டத்துக்குள் தெளிவாக எழுத வேண்டும். உதவி தேர்வாளர் நிலையில் ஏற்படும் தவறுகள் விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல், மறுமதிப்பீடு போன்றவற்றின்போது கண்டுபிடிக்கப்பட்டால் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story