அ.தி.மு.க. கூட்டணிக்கு அரசு ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்


அ.தி.மு.க. கூட்டணிக்கு அரசு ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 March 2019 5:15 AM IST (Updated: 20 March 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களின் கோரிக்கையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றும் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு அரசு ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 10 கோரிக்கைகளின் அடிப்படையில் தான் பா.ம.க. இணைந்தது. அவற்றில் 7-வது கோரிக்கையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால் அவற்றை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அதில் வலியுறுத்தியிருக்கிறோம். இக்கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாக அ.தி.மு.க. அரசு பா.ம.க.விடம் உறுதியளித்திருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நடைபெற்ற விவாதங்களின் போதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தாங்களாக முன்வந்து அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு பா.ம.க. உறுதி பூண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டும். ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகும் தமிழகத்தை ஆளப்போவது அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வால் தான் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதற்காக அழுத்தம் கொடுக்கவும், வெற்றி பெறுவதற்கும் பா.ம.க.வால் மட்டும் தான் முடியும்.

இவற்றை உணர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியை ஆதரித்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வாக்களிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க பா.ம.க போராடும்; வெற்றி பெறும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story