வருமானவரித்துறை மூலம் ஒவ்வொரு வங்கிக்கணக்கும் கண்காணிப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் காரணமாக வருமானவரித்துறை மூலம் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் நடக்கும் பணப் பரிமாற்றமும் கண்காணிக்கப்படுகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது வாகனத்தில் கட்சி கொடியை பொருத்துவதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். கூட்டணி கட்சியின் கொடிகளையும் அனுமதி பெற்று வாகனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக வாகனங்களில் கொடிகள் உள்ளிட்ட இதர உபகரணங்களை பொருத்தும்போது மோட்டார் வாகன சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்.
சென்னையில் அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்கி கணக்கு மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் எடுத்துச்செல்வதற்கு பல்வேறு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ளது. ஆனாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் சான்றைப் பெற்றுச்செல்ல வேண்டும்.
வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரும் வரவுகள் பற்றி வருமானவரித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். ஆயிரக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்படும் வங்கிக் கணக்குகளில் திடீரென்று ஒரு லட்சத்துக்கும் மேல் பணம் புரளத்தொடங்கினால் அதுவும் வருமான வரித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இந்த காலகட்டத்தில் பணப் பரிமாற்றத்தில் வித்தியாசங்கள் காணப்படும் வங்கிக் கணக்குகள், சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டு கண் காணிக்கப்படும்.
திடீரென்று நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக் கும் வங்கிக்கணக்கில் திடீர் பண வரவு குறித்து கண்காணித்து அது குறித்த தகவல் களை வருமானவரித்துறை தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்றங்களும் வருமான வரித்துறையின் கண் காணிப்பில் உள்ளன.
தமிழகத்தில் இதுவரை தேர்தல் நடவடிக்கையில் ரூ.12 கோடியே 80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 19-ந் தேதியன்று மட்டும் ரூ.3 கோடியே 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 94 கிலோ கட்டித் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மதுரையைச் சேர்ந்த கிருபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 1.8 கிலோ வெள்ளி, மதுபான பாட்டில்கள் மற்றும் சிறிய பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றோடு கைத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 3,166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு சொத்துக்களில் செய்யப்பட்டிருந்த 1.61 லட்சம் சுவர் விளம்பரங்களும், தனியார் சொத்துகளில் செய்யப்பட்டிருந்த 1.28 லட்சம் சுவர் விளம்பரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர் இடம்பெறும் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு செய்து தரப்படும் குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள், அந்தந்த வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளர் இல்லாத கூட்டம் என்றால், அரசியல் கட்சியின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
வரும் 24-ந் தேதியன்று 3 லட்சத்து 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தேர்தல் ஆணையத்தில் இருந்து வரவில்லை. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் உள்ள மற்ற அறைகளில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
சி விஜில் செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். இதில் பதிவாகும் புகார் பற்றிய விவரங்கள் மின்னணு முறையில் பதிவாகி இருக்கும். எனவே, பழைய பதிவுகளை இதில் பதிவேற்றம் செய்தால் அது நிராகரிக்கப்பட்டு விடும்.
அந்த வகையில் இதுவரை 470 வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 154 புகார்கள் தேவையற்றவை என்று நீக்கப்பட்டுவிட்டன. 78 புகார்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. 119 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story