எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 13-ந் தேதி சென்னை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 13-ந் தேதி சென்னை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘கோடநாடு கொலை சம்பவம் குறித்து தனியார் இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோவை மையமாக வைத்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இந்த பேட்டி முரசொலி பத்திரிகையில் வெளியானது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி, கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னுடைய நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டதாக மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி, ‘இந்த வழக்கு விசாரணைக்காக இன்று (வியாழக்கிழமை) மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகவேண்டும்’ என்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story