எடப்பாடி பழனிசாமி நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம்


எடப்பாடி பழனிசாமி நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 21 March 2019 4:30 AM IST (Updated: 21 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க. தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஏழை, எளிய வாக்காளர்களை கவரும் வகையில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மாதம் ரூ.1,500 நிதி உதவி வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. குறிப்பிட்டுள்ளது. கவர்ச்சிகரமான இந்த அறிவிப்பு வாக்குகளை பெற்று தரும் என்று அ.தி.மு.க. நம்புகிறது.

பிரசாரம்

அந்தவகையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம் செய்கிறார். அதற்கு முன்பாக, காலை 9 மணிக்கு சேலம் அருகே உள்ள கருமந்துறை விநாயகர் கோவிலுக்கு சென்று, சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து அவர் பிரசார பயணத்தை தொடங்குகிறார்.

பகல் 12 மணிக்கு வாழப்பாடி, அயோத்தியாபட்டினம் ஆகிய பகுதிகளில் எல்.கே.சுதீசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். மாலை 5 மணிக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தொப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, நல்லம்பள்ளி, தர்மபுரி டவுன், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் சேலத்தில் இரவு தங்குகிறார்.

சென்னை

23-ந்தேதி காலை 10 மணிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டசபை தொகுதிகள் மற்றும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, கே.வி.குப்பம், வேலூர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு வேலூரில் தங்குகிறார். 24-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள சோளிங்கர் சட்டசபை தொகுதி மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு அவர் சென்னை திரும்புகிறார்.

25-ந்தேதி மதியம் 2 மணி முதல் 6 மணி வரை வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இடைத்தேர்தல் நடைபெற உள்ள பெரம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். 26-ந்தேதி மத்திய சென்னை, தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.

காஞ்சீபுரம்

27-ந்தேதி காஞ்சீபுரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள், இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்போரூர், பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

Next Story