2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு
மக்களவை தேர்தலையொட்டி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
சென்னை
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காணும் வரை 2,000 ரூபாய் நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என அரசு தலைமை வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அரசாணையை திருத்தி அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களவை தேர்தல் காரணமாக, 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பின்னர் தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story