ரூ.500 குறைந்ததால் மனுதாக்கல் செய்ய முடியாமல் சுயேச்சை வேட்பாளர் ஏமாற்றம்
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று சுயேச்சை வேட்பாளரான பாண்டூரை சேர்ந்த விவசாயி அரசன் (வயது 57) கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று சுயேச்சை வேட்பாளரான பாண்டூரை சேர்ந்த விவசாயி அரசன் (வயது 57) கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மனுதாக்கல் செய்ய பணத்தை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.12 ஆயிரத்து 500-க்கு பதிலாக ரூ.500 குறைவாக இருந்தது. உடனே அவர் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, காய்கறி வாங்க ரூ.500-ஐ அவர் எடுத்தது தெரியவந்தது.
உடனே தன்னுடன் வேட்பு மனுவை முன்மொழிய அழைத்து வந்தவர்களிடம் கேட்டுப்பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. அங்கிருந்த பலரிடம் பணம் கேட்டும் யாரும் கொடுத்து உதவ முன்வரவில்லை. இதனால் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
இது பற்றி அரசன் கூறுகையில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 முறை சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியிலும் 2 முறை போட்டியிட்டேன். உள்ளாட்சி தேர்தலிலும் 2 முறை போட்டியிட்டு இருக்கிறேன். ரூ.500 குறைந்ததால் மனுதாக்கல் செய்ய முடியவில்லை. நாளை (இன்று) மனுதாக்கல் செய்ய வருவேன் என்றார்.
Related Tags :
Next Story