ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி


ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 22 March 2019 4:30 AM IST (Updated: 22 March 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

சென்னை, 

திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் ஆஜரானார். அவருக்கு வழக்கு நகல் வழங்கப்பட்டது. இதன்பின்னர், வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.

இதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான், ஜெயலலிதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன். எடப்பாடி பழனிசாமிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய தயாராக இருக்கிறேன்.

என்னை பொறுத்தமட்டில் வழக்குகள் போடுவதன் மூலம் மட்டுமே எனது வேகம் அதிகரிக்கும். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

எதையெல்லாம் செய்வோமோ அதைத்தான் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளது. மோடியை போல் வாய்ச்சொல்லில் வீரராக இல்லாமல் செயல்பாட்டில் காங்கிரஸ் வீரனாக இருக்கும்.

பா.ஜனதாவின் எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை. எனவே தான், பா.ஜ.க. மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். மேலிடம் பட்டியலை வெளியிடும்போது தான் ராஜாவின் பெயர் பட்டியலில் இருக்கப்போகிறதா? அல்லது ஆட்டுப்பட்டியில் அடைபட்டு போகிறாரா? என்பது தெரியும்.

இந்தியா முழுவதும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டி இருப்பதால் காங்கிரஸ் பட்டியல் வெளியாவது தாமதம் ஆகி உள்ளது. விரைவில் பட்டியல் வெளியாகும். அ.தி.மு.க. தோல்வி பயத்தில் மிரண்டு போய் உள்ளது.

எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று கூறி வருகிறார்கள். ஓட்டுக்கு ரூ.1,500 அல்ல, ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story