தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல ‘காமெடியன்’ டாக்டர் ராமதாஸ் கிண்டல்


தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல ‘காமெடியன்’ டாக்டர் ராமதாஸ் கிண்டல்
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 22 March 2019 9:28 AM GMT)

தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் இல்லை, ‘காமெடியன்’ என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை, 

மத்திய சென்னை தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம் பால் அறிமுக கூட்டம் அறிஞர் அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். வேட்பாளரை அறிமுகம் செய்து டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் பெண்கள் ஓட்டு அதிகம். பெண்கள் பெரும்பான்மை, ஆண்களாகிய நாங்கள் சிறுபான்மையாக இருக்கிறோம். பெண்கள் அதிகமானவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு செலுத்தியவர்கள். அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் இந்த முறை மாம்பழத்துக்கு வாக்களிக்க காத்திருக்கிறீர்கள். எங்கு தீமை நடந்தாலும் அதனை அழிக்கக்கூடிய வல்லமை பெண்களுக்கு தான் உண்டு.

காமெடியன்

நாங்கள் அவியல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி, ஆக்கப்பூர்வமான கூட்டணி. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, பா.ம.க. தேர்தல் அறிக்கையை பார்த்தாலே கொள்கை கூட்டணி என்று தெரியும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உப்பு, சப்பு, காரம் எதுவும் இல்லை அதில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் யாரும் இல்லை. காமெடியன் மட்டும் தான் இருக்கிறார்.

எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து 90 சதவீதம் காப்பியடித்திருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதமும் ஒன்றுமே இல்லை. நடக்கமுடியாததை, செய்ய முடியாததை சொல்லியிருக்கிறார்கள்.

தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டவர் கடந்த 10 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தார். யாருக்காவது, எதையாவது செய்திருக்கிறாரா என்று கேட்டு பாருங்கள். தி.மு.க.வை பொறுத்தவரை ஒரு வன்முறை கட்சி. இப்படி சொல்வதால் அவர்கள் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். நான் உண்மையை தான் சொல்கிறேன்.

அதிருப்தி இல்லை

சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகளில் 52 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது. 17 ஆண்டுகள் தான் மற்ற கட்சிகள் ஆட்சி செய்திருக்கிறது. காங்கிரஸ் வறுமையை ஒழிக்கப்போகிறோம் என்று சொன்னார்கள். அது முடியாது என்று அவர்களே பின்னாளில் வறுமையை குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் அதுவும் முடியவில்லை.

வறுமையை ஒழிப்பதற்கு நல்ல திட்டங்களை அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு செய்துவருகிறது. கூட்டணியில் இருப்பதற்காக இதனை செய்யவில்லை. கடந்த 8 ஆண்டு காலத்திலே மக்களுக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள் நலனே முக்கியம் என்று பாடுபட்டு வருகிறார்கள்.

40 தொகுதிகளிலும் வெற்றிபெற...

பா.ம.க. அவ்வப்போது தேவைக்கேற்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. நாங்கள் கூட்டணியில் சேரும்போது 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் நலன், உரிமைகளை வென்று எடுக்க இந்த கூட்டணியை அமைத்து இருக்கிறோம். 40 நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் வெற்றிபெறுவோம். அதேபோல், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதற்கு கூட்டணி கட்சி தோழர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுலஇந்திரா, தியாகராயநகர் சத்யா, முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சலசலப்பு

கூட்டத்தில் வரவேற்புரையின்போது அனைத்து கட்சி தலைவர்கள் பெயரையும் கூறினார்கள். ஆனால் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பெயரை சொல்லாமல் விட்டுவிட்டனர்.

இதனால் த.மா.கா. மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் வந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கோபம் அடைந்து அங்கிருந்து வெளியேறினர். கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story