தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு ஆறுகளை இணைக்க எடுத்த நடவடிக்கை என்ன? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு ஆறுகளை இணைக்க எடுத்த நடவடிக்கை என்ன? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-22T01:49:34+05:30)

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுசெல்வதற்காக தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறுகளை இணைக்க 2006-ம் ஆண்டு தமிழக அரசு திட்டமிட்டு பணிகளை தொடங்கியது. 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அந்த திட்டத்தை விரைவுபடுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால், தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை அப்பாவு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர்.

என்ன நடவடிக்கை?

அப்போது பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசனவசதி பெறும் வகையில் இத்திட்டத்தை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 1,244 ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே 173 ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story