சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை: 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி பறிமுதல் ரூ.66 லட்சமும் சிக்கியது


சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை: 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி பறிமுதல் ரூ.66 லட்சமும் சிக்கியது
x
தினத்தந்தி 22 March 2019 11:30 PM GMT (Updated: 2019-03-23T00:16:03+05:30)

சென்னையில் ஒரே நாளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 8 கிலோ தங்கம், ரூ.66 லட்சம் மற்றும் 83 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிராட்வே, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு நிலைகுழுக்கள் அமைக்கப்பட்டு சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரும் நகை, பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை வால்டாக்ஸ் சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி தேவராஜன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

தங்கம், வெள்ளி பறிமுதல்

அதில் அந்த காரில் 6 கிலோ 288 கிராம் தங்க நகைகள் இருந்தது. ஆனால் அதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பூக்கடை பகுதியில் அதிகாரி கண்ணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படை அதிகாரிகள், முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 1.9 கிலோ தங்கம் மற்றும் ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் பூக்கடை அனுமந்தராயன் தெருவில் பூக்கடை உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 83 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.36 லட்சம்

புரசைவாக்கம் வள்ளியம்மாள் சாலை மற்றும் அழகப்பா சாலை சந்திப்பில் உதவி பொறியாளர் பாலசுப்பிரமணி தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.31 லட்சத்து 88 ஆயிரத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகே தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரி குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலை உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் இருந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் அருள்பிரகாசிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி கருணாகரனிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் நேற்று ஒரேநாளில் 8 கிலோ தங்கம், ரூ.66 லட்சம் மற்றும் 83 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

Next Story