சிலை திருட்டு வழக்கில் போலீசார் நடவடிக்கை ஓய்வு பெற்ற துணை சூப்பிரண்டு காதர்பாட்சா மீண்டும் கைது


சிலை திருட்டு வழக்கில் போலீசார் நடவடிக்கை ஓய்வு பெற்ற துணை சூப்பிரண்டு காதர்பாட்சா மீண்டும் கைது
x
தினத்தந்தி 22 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-23T01:34:09+05:30)

சிலை திருட்டு வழக்கில் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாட்சா மீண்டும் கைது செய்யப்பட்டு கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

தஞ்சை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டும்போது சிவன், பார்வதி உள்பட 6 பஞ்சலோக சிலைகள் கிடைத்தது. இந்த சிலைகளை ஆரோக்கியராஜ் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்காமல் அதே ஊரைச்சேர்ந்த சந்தானம் என்பவருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு விற்க முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்பாட்சா, ஏட்டாக இருந்த சுப்புராஜ் ஆகியோர் அந்த சிலைகளை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த சிலைகளை பறிமுதல் செய்து சிலை கடத்தல்காரர்களிடம் ரூ.15 லட்சத்துக்கு விற்று விட்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு

இதுதொடர்பாக ஆரோக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திருவள்ளூர் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த காதர்பாட்சாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காதர்பாட்சாவை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர். இந்த வழக் கில் காதர்பாட்சா ஜாமீன் பெற்று வெளியில் இருந்து வந்தார்.

நாறும்பூநாதர் கோவில் சிலைகள்

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பழுவூர் நாறும்பூநாதர் சிவன் கோவிலில் நடராஜர் சிலை காணாமல் போனது. இந்த வழக்கினை அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா விசாரித்து வந்துள்ளார். அந்த வழக்கில் தொடர்பு இல்லாத 3 பேரை காதர்பாட்சா கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

இந்த வழக்கு தற்போது கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரித்து வருகிறார். இந்த நிலையில் நாறும்பூநாதர் கோவிலில் காணாமல் போன நடராஜர் சிலை கொல்கத்தாவில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் இருப்பது தெரிய வந்தது.

மீண்டும் கைது

இந்த சிலை தொடர்பாக அங்குள்ள அதிகாரிகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொல்கத்தா சென்று அந்த சிலை தொடர்பாக விசாரித்தபோது இந்த சிலை காணாமல் போனதில் தீனதயாளன், சுபாஷ் சந்திரகபூர், துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாட்சா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய காதர்பாட்சாவை நேற்று முன்தினம் நள்ளிரவு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்து நேற்று காலை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் பிள்ளை வீட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து காதர்பாட்சாவை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து காதர்பாட்சா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story