பரிசோதிக்காத ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிய சாத்தூர் பெண் 25-ந் தேதி ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
உரிய பரிசோதனை செய்யாமல் ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிய சாத்தூர் பெண், வருகிற 25-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துக்குமார், அப்பாஸ் மந்திரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உரிய முறையில் பரிசோதிக்காததால் எச்.ஐ.வி. தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ரத்த வங்கி பணியாளர்கள், டாக்டர்களின் கவனக்குறைவால்தான் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தானமாக பெறப்படும் ரத்தத்தை ரத்தசோகை பாதித்த பெண்கள், கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் என பல லட்சம் நோயாளிகளுக்கு செலுத்துகிறார்கள். தானமாக பெற்ற ரத்தத்தில் நோய் தொற்று உள்ளதா? என முறையாக பரிசோதித்து, அதன்பின் மற்றவர்களுக்கு செலுத்த வேண்டும்.
பணியாளர்கள் இல்லை
இதற்காக தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உரிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும். ஆனால் ரத்தப்பரிசோதனை செய்வதற்கான ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் ரத்தப்பரிசோதனை செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே பாதுகாப்பான முறையில் ரத்தம் தானமாக பெற்று, முறையாக பரிசோதித்து, பிறருக்கு செலுத்த உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்கவும், தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக பெற கடும் விதிகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் அந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நவீன பரிசோதனை
மனுதாரர் முத்துக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல் நீலமேகம், “சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா என்பதை அறிய நவீன பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பழைய நடைமுறைகள் மூலம் தான் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா? என்பது 3 மாதத்துக்கு பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மேலைநாடுகளில் பி.சி.ஆர். (பாலிமர் செயின் ரியாக்சன்) பரிசோதனை மூலம் 48 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம். அங்கு உள்ளதுபோல நவீன பரிசோதனை எந்திரங்களை தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பொருத்த வேண்டும்” என்று வாதாடினார்.
அதேபோல் அப்பாஸ் மந்திரி சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், “ரத்தப்பரிசோதனை செய்வதில் உள்ள குளறுபடிகளை தவிர்க்க கடும் விதிகளை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.
நேரில் ஆஜராக உத்தரவு
விசாரணை முடிவில், “எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள, வருகிற திங்கட்கிழமை (25-ந்தேதி) அவர் நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story