தமிழக டி.ஜி.பி. இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


தமிழக டி.ஜி.பி. இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 23 March 2019 5:15 AM IST (Updated: 23 March 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

டி.ஜி.பி. உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

டி.ஜி.பி. உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தேவையில்லாத படங்கள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக ‘சி விஜில்’ செல்போன் செயலிக்கு 657 புகார்கள் வந்துள்ளன. சிலர் செல்பி படம் எடுத்தும், சிலர் மரம், செடிகொடிகள் போன்ற தேவையில்லாத படங்களை அதில் பதிவேற்றம் செய்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.

அரசு சொத்துகளில் செய்யப்பட்டிருந்த ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 977 தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனியார் சொத்துகளில் வரையப்பட்டிருந்த ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 930 விளம்பரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுவர் விளம்பரங்களில் வேட்பாளரின் பெயர் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தும் செலவு, அந்த வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். கட்சி விளம்பரம் என்றால் அந்த கட்சியின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

ரூ.19 கோடி பறிமுதல்

கையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், வங்கியில் எடுக்கப்பட்டதற்கான ரசீது அல்லது காசோலை சம்பந்தப்பட்ட விவரங்கள் அல்லது ஏ.டி.எம். ரசீது போன்ற எதையாவது கையில் வைத்திருப்பது அவசியம்.

தமிழகம் முழுவதும் மேற்கொண்ட வாகன சோதனைகள் மூலம் 21-ந்தேதியில் மட்டும் ரூ.5.21 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதுவரை ரூ.19.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் பிடிபட்ட 94 கிலோ தங்கம் உரிய ஆவணங்களை காட்டிய பிறகு திருப்பித் தரப்பட்டுவிட்டது.

டி.ஜி.பி. இடமாற்றம்?

வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பு, அதாவது ஏப்ரல் 16-ந்தேதி மாலை 6 மணியோடு தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அங்கு மட்டும் தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 16-ந்தேதி இரவு 8 மணிவரை நீடிக்கலாம்.

டி.ஜி.பி. உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story