பதிவுத்துறை இணையதளத்தில் குளறுபடி: ‘ஆன்-லைன்’ வில்லங்க சான்றிதழ்களில் தவறான தகவல்கள் நில உரிமையாளர்கள் அதிர்ச்சி
பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் ‘ஆன்-லைன்’ வில்லங்க சான்றிதழ்களில் தவறான தகவல்கள் தரப்படுகின்றன.
சென்னை,
பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் ‘ஆன்-லைன்’ வில்லங்க சான்றிதழ்களில் தவறான தகவல்கள் தரப்படுகின்றன. இதனால், நில உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வில்லங்க சான்றிதழ்
வீடு, நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்க முயற்சிப்பவர்கள், முதலில் சொத்தின் கிரையப் பத்திரம், பட்டா ஆகியவற்றை அலசி ஆராய்வது வழக்கம். சொத்தின் கடந்த கால வரலாற்றை வில்லங்க சான்றிதழ் மூலம் அறிய முடியும். அந்த சொத்து யாரிடம் இருந்து யார்- யாருக்கெல்லாம் கைமாறி வந்திருக்கிறது என்பதை வில்லங்க சான்றிதழ் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
முன்பெல்லாம் வில்லங்க சான்றிதழ் பெற சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி முதல் ‘ஆன்-லைன்’ மூலம் மட்டுமே வில்லங்க சான்றிதழ் பெறும் முறையை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியது. 1987-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு பதிவுசெய்யப்பட்டுள்ள சொத்தின் தகவல்களை இதன் மூலம் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
‘ஆன்-லைன்’ மூலம் கட்டணம்
எந்த ஆண்டு முதல் வில்லங்க சான்று வேண்டும், எந்தெந்த சர்வே எண்களுக்கு வேண்டும் என்பதை வைத்து அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தக்கட்டணத்தையும் ‘ஆன்-லைன்’ மூலமே பதிவுத்துறைக்கு செலுத்த வேண்டும். இதுபோன்ற வசதிகளால் வில்லங்க சான்றிதழ் பெறுவது எளிதாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 8-ந் தேதி முதல் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ‘ஆன்-லைன்’ வில்லங்க சான்றிதழ்கள் விண்ணப்பித்தவர்களில் பலருக்கு தவறான தகவல்களே வழங்கப்பட்டுள்ளது. பதிவுத்துறை அளித்த வில்லங்க சான்றிதழில், “தேடுதலின் விளைவாக மனுவில் விவரித்த சொத்தை பொறுத்து எவ்வித விவரங்களும், வில்லங்கங்களும் காணப்படவில்லை என்று சான்றளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சொத்தின் தற்போதைய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
விவரம் எதுவும் இல்லை
இதனால், சொத்தின் உரிமையாளர்களும், சொத்தை வாங்க முயற்சி செய்பவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் செங்குன்றத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக வங்கிக் கடன் பெற, ‘ஆன்-லைன்’ மூலம் வில்லங்க சான்று விண்ணப்பித்திருந்தார். அதற்கான தொகையையும் செலுத்தி இருந்தார். ஆனால், பதிவுத்துறை மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட வில்லங்க சான்றிதழில் எந்தவித விவரமும் இல்லை.
இதனால், அதிர்ந்துபோன அவர், இதுகுறித்து சார்-பதிவாளர் அலுவலகம் சென்று அங்குள்ள அதிகாரியிடம் அவர் விளக்கம் கேட்டபோது, “8-ந் தேதியில் இருந்து வில்லங்க சான்றிதழ் வழங்குவதில் பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் நாங்கள் தெரிவித்துவிட்டோம். நீங்களும் அங்கே சென்று புகார் தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளார். அதற்கு சுப்பிரமணியன், “நான் ரூ.1,300 பணம் கட்டியுள்ளேன். தகவல்கள் முறையாக அளிக்காதபோது அந்த பணத்தையாவது திருப்பி தாருங்கள்” என்று அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, “பணத்தை திரும்ப பெறுவது குறித்தும் நீங்கள் பதிவுத்துறை தலைவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
புது வில்லங்கம்
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக ‘ஆன்-லைன்’ மூலம் வில்லங்க சான்றிதழ் பெற விண்ணப்பித்தவர்களில் பலருக்கு தவறான தகவல்களே வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு சொத்தின் மீது வில்லங்கம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்வதற்காகத்தான் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பார்கள். ஆனால், இப்போது தவறாக அளிக்கப்படும் வில்லங்க சான்றிதழ் மூலம் புது வில்லங்கம் ஏற்பட்டுவிட்டதே என்று பொதுமக்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story