அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் தாக்கு
“அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
அரூர்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அரூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், அரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காலியாக இருக்கும் ரோட்டில் செல்கிறார்
இங்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்றீர்களே, குழுமி இருக்கின்றீர்களே, எதிரணினர் கூட்டத்தில் இதில் ஒரு கால்வாசி கூட்டம் கூட அங்கு இல்லை என்பதை இன்றைக்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
காலியாக இருக்கக்கூடிய ரோட்டில் முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி போய்க்கொண்டிருக்கக் கூடிய காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றது. பத்திரிக்கைகளில் படங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. வாட்ஸ் அப்பில் தொலைக் காட்சிகளில் ஆதாரங்களாக செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகின்றாரே, பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது?.
மோடியை வணங்குகிறார்கள்
காரணம் இந்த இருவரும் அ.தி.மு.க. என்ற அந்த கட்சியை இவரிடத்தில் ஒப்படைத்து விட்டு மறைந்து விட்டார்கள் என்று எடப்பாடி பேசியிருக்கின்றார். அதாவது, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க. என்ற கட்சியை இவரிடத்தில் விட்டுவிட்டு போயிருக்கிறார்களாம். அதை இவர் பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாராம். இப்படி அவர் பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் தெய்வமாக இன்றைக்கு வணங்கிக்கொண்டு இருக்கக்கூடியவர் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமி தான்.
இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அ.தி.மு.கவை இன்றைக்கு, அடகு கடையில் அடகு வைத்திருக்கிறார்கள். அமித்ஷாவிடம் கொண்டு சென்று அடகு வைத்திருக்கின்றார்கள். மார்வாடி கடையில் அடகு வைத்தால் கூட மீட்டு விடலாம். ஆனால், அமித்ஷாவிடம் சென்று நீங்கள் அடகு வைத்து இருக்கின்றீர்களே, அதை மீட்கவே முடியாது என்ற ஒரு நிலைதான் அந்த கட்சிக்கு உருவாகி இருக்கின்றது.
அடமானம் வைத்து விட்டார்கள்
ஏன் அடகு வைத்திருக்கிறார்கள் என்றால் என் மீது ஒரு கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது, ஒரு வழக்கு என் மீது வந்திருக்கின்றது, அந்த கொலைக்குற்றத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று, கெஞ்சி கூத்தாடி அ.தி.மு.கவை கொண்டு சென்று அமித்ஷாவிடத்தில் அடகு வைத்து இருக்கின்றார்கள். ஜெயலலிதாவை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித்தீர்த்து பல்வேறு கோணங்களில் விமர்சனங்கள் செய்து ஒரு புத்தகத்தை எழுதி அ.தி.மு.கவின் கதை என்ற தலைப்பில் அந்த புத்தகத்தை வெளியிட்டவர் டாக்டர் ராமதாஸ். அவருடன் கூட்டணி வைத்திருக்கிறார் என்று சொன்னால், எப்படி எடப்பாடி ஜெயலலிதா வழியில் நடப்பார்?.
மோடி வழியில் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இதே ஜெயலலிதா, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன சொன்னார் மோடியா இந்த லேடியா? என்று கேட்டார். அப்படிப்பட்ட நிலையில் இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் அடமானம் வைத்து இருக்கின்றீர்களே?.
அன்புமணியிடம் கம்பீரம் இல்லை
பொருந்தாத கூட்டணி, மக் கள் விரும்பாத கூட்டணியை பா.ம.க வைத்திருக்கின்றது. பா.ம.க தொண்டர்களே அதை ஏற்றுக்கொள்ளவில்லை அதை நாங்கள் வெளிப்படையாக பார்க்கின்றோம். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியவர். ஆனால், இன்றைக்கு அவரின் நிலை என்ன?. அன்புமணியிடத்தில் கம்பீரம் இல்லை, முகத்தில் மலர்ச்சி இல்லை. போட்டி போடுவதற்கு விருப்பம் இல்லை. கட்டாயப்படுத்தி அவரை நிற்க வைத்து இருக்கின்றார்கள். எனவே இப்பொழுதும் நாங்கள் சொல்கின்றோம், இன்னும் வேட்பு மனு வாபஸ் வாங்குவதற்கு நாட்கள் இருக்கின்றது. அந்த நாளுக்குள் நீங்கள் வாபஸ் வாங்கி விட்டுப் போனால் தான் உங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். எனவே, அந்த நிலையில் தான் அவர் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
பத்து அம்சம் கோரிக்கை வைத்து இருக்கின்றோம் என்று டாக்டர் ராமதாஸ் சொல்லுகின்றார். நான் கேட்கின்றேன் அந்த 10 அம்ச கோரிக்கையில் சென்னையில் இருந்து சேலம் வரையில் போடக்கூடிய எட்டு வழிச் சாலை இருக்கிறதா?. அதற்காக போராடினீர்களே. எனவே, கூட்டணி என்கின்ற பெயரில் கொள்கையை அடகு வைத்து மக்களுக்கு துரோகம் செய்து இருக்கக்கூடிய கட்சி தான் பா.ம.க. என்பதை நான் இங்கு அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றேன்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அனைத்தையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து நம்முடைய வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உழவர் சந்தையில் ஆதரவு திரட்டினார்
தர்மபுரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த மு.க.ஸ்டாலின் தர்மபுரி அதியமான் அரண்மனை ஹோட்டலில் தங்கி இருந்தார். நேற்று காலை திடீரென்று மு.க.ஸ்டாலின் தர்மபுரி உழவர் சந்தைக்கு சென்றார்.
அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடமும், காய்கறி விற்பனை செய்பவர்களிடமும் கலந்துரையாடினார். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் காபி அருந்தினார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய மு.க.ஸ்டாலின் உடன் சிறுவர், சிறுமிகள், இளைஞர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் பென்னாகரம் ரோட்டில் வசிக் கும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சின்னசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story