கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
ஆண்களுக்கு நிகராக கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆண் வேட்பாளர்களுக்கு நிகராக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகளை நாம் தமிழர் கட்சி ஒதுக்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சீமான் பேசினார். முன்னதாக கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இடஒதுக்கீடு
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சரிபாதி (50 சதவீதம்) இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* பெண்கள், மீனவர்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்கப்படும்.
* விவசாயத்துக்கு முழு நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்கவேண்டும்.
நெய்தல் படை
* முல்லைபெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு உயரம் 152 அடியாக உயர்த்தப்படும்.
* விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பெறும் வகையில் சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும்.
* ‘நீட்’, ‘நெட்’ தேர்வு முறை ரத்து செய்யப்படும்.
* அண்டை நாட்டு கடற்படை நமது நாட்டு மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடும் அராஜகங்களை தடுக்க ‘நெய்தல் படை’ அமைக்கப்படும்.
* ஆட்சிக்கு வந்த உடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் 7 பேரும், நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறை கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள்.
இதேபோல நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
Related Tags :
Next Story