விருதுநகர் அருகே போலீஸ் நிலையம் மீது கல்வீச்சு; இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் 25 பேர் கைது, பதற்றம் நீடிப்பு
விருதுநகர் அருகே மோதலில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீஸ் நிலையத்தின் மீது கல்வீசியது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே மோதலில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீஸ் நிலையத்தின் மீது கல்வீசியது. இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருதரப்பினர் பிரச்சினை
விருதுநகர் அருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் வழிபடுவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருதரப்பினரும் கோவிலில் வழிபாடு நடத்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் நடந்த கோவில் திருவிழாவின் போது ஒரு தரப்பினர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறுப்படுகிறது.
இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் தெருக்கள் வழியாக சென்றது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கல்வீச்சில் 5 பேர் காயம்
இந்த நிலையில் நேற்று காலையிலும் பிரச்சினை ஏற்பட்டு திடீர் மோதலானது. வீடுகள் மீதும், ஆட்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் ஒரு தரப்பை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 18), காளிதாஸ் (19), காளிமுத்து (20), மற்றொரு தரப்பை சேர்ந்த விவேக் (23), ஆண்டிச்சி (50) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். சில வீடுகளின் மேற்கூரைகளும் சேதம் அடைந்தன.
தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் மோதல் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று கல்வீச்சில் காயம் அடைந்த 5 பேரையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் நிலையம் மீது தாக்குதல்
இதனைதொடர்ந்து போலீசார் இருதரப்பை சேர்ந்த 24 பேரை விசாரணைக்காக மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆவேசம் அடைந்து, போலீஸ் நிலையத்தின் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பெண் போலீஸ் சுப்புலட்சுமி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
மல்லாங்கிணறு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 25 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story