சென்னையில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி இன்றும் நடக்கிறது: மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
சென்னையில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டனர். கண்காட்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சென்னை,
சென்னையில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டனர். கண்காட்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கல்வியில் ‘தினத்தந்தி’ பங்களிப்பு
கல்வியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு வகையில் ‘தினத்தந்தி’ பங்களிப்பை அளித்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாணவர் ஸ்பெஷல், மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு பொதுத்தேர்வுகளின் போது வினா- விடை புத்தகம் ஆகியவை தினத்தந்தி நாளிதழுடன் வழங்கப்பட்டு வருகிறது.
பிளஸ்-2 படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தக்கட்டமாக உயர் படிப்பை எங்கு படிக்கலாம்? எந்த மாதிரியான படிப்புகளை தேர்வு செய்யலாம்? என்பது குறித்த சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் ‘தினத்தந்தி’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ‘தினத்தந்தி’ மற்றும் சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் இணைந்து ‘கல்வி எக்ஸ்போ- 2019’ கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
கண்காட்சி
கண்காட்சியை சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் டைரக்டர் ஜெனரல் டி.எஸ்.ஸ்ரீதர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
பின்னர், வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கை இயக்குனர் ராஜேந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் செந்தில்குமார், அமெத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம், கே.சி.ஜி. தொழில்நுட்ப கல்லூரி (இந்துஸ்தான் குழுமம்) முதல்வர் ஜி.பிரபாகரன், செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் பிரான்சிஸ் பீட்டர், ஆல்பா என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் பி.சவுமியா, அப்பல்லோ கல்லூரியின் மூத்த மேலாளர் கார்த்திக்கேயன், கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.
ஆர்வமுடன் பங்கேற்பு
இந்த கண்காட்சியில் பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவம், என்ஜினீயரிங், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மரைன் மற்றும் ஏரோனாட்டிக்கல் உள்பட அனைத்து உயர் படிப்புகளையும் கல்வி நிறுவனங்கள் ஒரே கூரையின் கீழ் அமைத்து இருந்தன.
கண்காட்சி தொடங்குவதற்கு முன்பாகவே மாணவ- மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் மாணவ-மாணவிகளை காத்திருக்க வைக்க கூடாது என்பதற்காக கண்காட்சி ஆரம்பிப்பதற்குள் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டனர்.
உயர்கல்வி படிப்புகள்
கண்காட்சியில் மருத்துவம், என்ஜினீயரிங், பாலிடெக்னிக், மரைன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட உயர்கல்வி படிப்புகளில் எதை படிக்கலாம்? எங்கு சென்று படிக்கலாம்? எந்த படிப்புகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு? வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்புகள் எவை? தொழில்நுட்பத்துடன் படிக்கக்கூடிய படிப்புகள் எவை? உயர் படிப்புகளை தேர்வு செய்வதால் கிடைக்கும் பலன் என்ன? என்பது குறித்த பல்வேறு தகவல்களை அந்தந்த கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் பொறுமையோடும், எளிதில் புரியும்படியும் எடுத்து கூறினார்கள். மாணவ-மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்தனர்.
மேலும், அரங்கில் இடம்பெற்று இருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய கல்வி சிறப்பம்சங்கள் பற்றியும், மாணவர் சேர்க்கை முறை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.
பெரும்பாலான மாணவ- மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனர். பெற்றோருடன் மாணவ-மாணவிகள் வருவதால் விருப்ப பாடங் களை தேர்வு செய்வதில் ஏற்படும் குழப்பங்களை நிவர்த்தி செய்துகொள்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கல்வி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
நல்ல வரவேற்பு
சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் டைரக்டர் ஜெனரல் டி.எஸ்.ஸ்ரீதர் கூறியதாவது:-
தினத்தந்தியுடன் ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சியை நடத்துகிறோம். நல்ல வரவேற்பு இருக்கிறது. எங்களுடைய கல்லூரியில் என்ஜினீயரிங், மருத்துவம், பல் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகள் இருக்கின்றன. வேலைவாய்ப்புகள் அதிகம் தரக்கூடிய உயர்கல்வி படிப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்துக்கு ஏற்ற வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் படிப்புகளை கற்று தருகிறோம். எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 100 சதவீதம் வளாக வேலைவாய்ப்பை(கேம்பஸ் இன்டர்வியூ) உறுதி செய்து கொடுக்கிறோம். கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் வைத்து இருக்கிறோம். மாணவ-மாணவிகளுக்கு எந்த குறையும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலைவாய்ப்பு
அமெத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறுகையில், ‘எங்கள் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களில் 95 சதவீதம் பேர் வெளிநாடுகளில் தான் பணிபுரிகிறார்கள். 95 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியை ஏற்படுத்தி தருகிறோம். எங்களுடைய பல்கலைக்கழக ஆசிரியர்கள் கப்பல் அனுபவத்தில் பிரசித்தமானவர்கள். அவர்களை கொண்டு தான் மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறோம். 6 மாதம் கப்பலில் பயிற்சியும் அளிக்கிறோம்’ என்றார்.
செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் பிரான்சிஸ் பீட்டர் கூறும்போது, ‘எங்கள் கல்லூரி நிர்வாகம், வளாக வேலைவாய்ப்பு முகாம் கள், புற வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவற்றை தேசிய மற்றும் பன்னாட்டு தொழில் அமைப்புகளுடன் ஒப்பந்தமிட்டு மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். கல்லூரியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உயர் தரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது’ என்றார்.
வெற்றிபெற வேண்டும்
கே.சி.ஜி. தொழில்நுட்ப கல்லூரி (இந்துஸ்தான் குழுமம்) முதல்வர் ஜி.பிரபாகரன் கூறுகையில், ‘எல்லா மாணவர்களும் விருப்பப்பட்ட முறையில் வெற்றி பெற வேண்டும். அந்த உயரிய நோக்கத்தோடு எங்கள் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு உயர் படிப்புகளை சொல்லி தருகிறோம். 95 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்தி தருகிறோம். விருப்ப படிப்போடு சேர்த்து திறமையையும் மாணவர்களுக்கு அளிக்கிறோம். கல்லூரியில் அனைத்து வசதிகளும் இருக்கிறது’ என்றார்.
ஆல்பா என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் பி.சவுமியா கூறும்போது, ‘தொழில்நுட்ப படிப்புகளை உள்ளடக்கிய எங்கள் கல்லூரியில் மாணவ- மாணவிகள் எளிதாக படிப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. மாணவ-மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு 10 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் படிப்புகளை கற்றுக்கொடுக்கிறோம். என்ஜினீயரிங் கல்லூரிகளிலேயே விளையாட்டுக்கு என்று தனி நேரம் ஒதுக்குவது எங்கள் கல்லூரி தான்’ என்றார்.
இன்றுடன் நிறைவு
நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். கிண்டி, கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, போரூர், பல்லாவரம், வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து பஸ்வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதுமட்டுமில்லாமல், என்ஜினீயரிங் கலந்தாய்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?, மரைன் மற்றும் ஏரோனாட்டிக்கல் படிப்புகளில் அதிகம் மாணவர்கள் சேருவது ஏன்? நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது? கேட்டரிங் படிப்புகளை தேர்வு செய்தால் எங்கெல்லாம் வேலை கிடைக்கும்? உள்பட பல்வேறு விதமான மாணவ-மாணவிகளின் எண்ணோட்ட கேள்விகளுக்கு கல்வியாளர் ரமேஷ் பிரபா மற்றும் குழுவினர் ஆலோசனையும், பதில்களையும் வழங்குகின்றனர்.
தெளிவு கிடைத்தது
சென்னை திருமழிசையை சேர்ந்த மாணவி மோனாஸ்ரீ கூறியதாவது:-
பி.காம் படித்து வங்கியில் பணிபுரிய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. என்னுடைய ஆசை தான் பெற்றோருடைய ஆசையும். பி.காம் படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம்? அதற்கு எவ்வளவு செலவு ஆகும்? என்பது உள்பட பல்வேறு சந்தேகங்கள் இருந்தன.
இந்த கண்காட்சிக்கு என்னுடைய பெற்றோருடன் வந்தேன். பி.காம் மேனேஜ்மென்ட் படிப்பு தொடர்பாக கல்வி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் தெளிவுபடுத்தினார்கள். எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும் ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிறைய தகவல்கள்
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த திரிபுரசுந்தரி கூறியதாவது:-
தினத்தந்தியில் வந்த விளம்பரத்தை பார்த்து வந்தேன். பி.காம் படித்து கம்பெனி செகரட்டரியாக ஆசை. எந்த கல்லூரியில் சேர்ந்து பி.காம் படிப்பை தொடரலாம்? அல்லது வேறு படிப்புகளை படிக்கலாமா? என்ற யோசனையில் வந்தேன்.
கண்காட்சியில் பி.காம் படிப்பு தொடர்பாக நிறைய தகவல்களை ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் பொறுமையோடு தெரிவித்தார்கள். உபயோகமாக இருந்தது. வீட்டுக்கு சென்று பெற்றோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நல்ல ஆலோசனை
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தீபிகா கூறுகையில், ‘கண்காட்சிக்கு பெற்றோருடன் வந்தேன். என்ஜினீயரிங் படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அரங்கில் இருந்த கல்வி நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். வழக்கமாக அனைவரும் படிக்கும் படிப்புகளை தவிர, வேலைவாய்ப்புகள் அதிகளவில் இருக்கும் படிப்புகள் குறித்தும் கண்காட்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் ஆலோசனை மையத்தில் ஆலோசனை வழங்கினார்கள். அதில் நல்ல ஆலோசனைகள் கிடைத்தன’ என்றார்.
Related Tags :
Next Story