உயிரோடு இருந்த பெண்ணை இறந்ததாக கூறிய டாக்டர்கள் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


உயிரோடு இருந்த பெண்ணை இறந்ததாக கூறிய டாக்டர்கள் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 March 2019 1:49 AM IST (Updated: 24 March 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

உயிரோடு இருந்த பெண்ணை இறந்ததாக டாக்டர்கள் அறிவித்ததால் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பூசாரிபட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சுமதி(வயது 35). இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், தற்கொலை செய்துகொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த முருகேசன் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் சுமதியையும், மற்றொரு மருத்துவமனையில் முருகேசனையும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இறந்துவிட்டதாக கூறிய டாக்டர்கள்

இந்தநிலையில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சையில் இருந்த சுமதி இறந்து விட்டதாகவும், உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் அங்கிருந்த டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுமதியை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அவருடைய உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு சுமதியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் உயிரோடு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சுமதிக்கு இறுதிச்சடங்கு செய்து, உடலை மயானத்தில் புதைக்க குழியும் தோண்டியதாக கூறப்படுகிறது. அவர் உயிரோடு இருப்பதை அறிந்த உறவினர்கள், அந்த குழியை மூடிவிட்டனர்.

உறவினர்கள் முற்றுகை

மேலும், உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக தவறாக கூறிய தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மீதும், அந்த மருத்துவமனை நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமதியின் உறவினர்கள் மணப்பாறை போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்ற சுமதியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story