தமிழக மீனவர்கள் 11 பேரை படகுகளுடன் விடுதலை செய்ய நடவடிக்கை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழக மீனவர்கள் 11 பேரை படகுகளுடன் விடுதலை செய்ய நடவடிக்கை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 March 2019 9:15 PM GMT (Updated: 24 March 2019 8:11 PM GMT)

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரை படகுகளுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரை படகுகளுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த சிங்கள கடற்படை, இரு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை கைது செய்துள்ளது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. அவ்வாறு இருக்கும்போது கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது அத்துமீறலாகும். மத்திய, மாநில அரசுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழக மீனவர்களை கைது செய்வதை கடந்த சில வாரங்களாக இலங்கை படைகள் நிறுத்தி வைத்திருந்தன. அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு அண்மையில் நிபந்தனையின்றி விடுதலை செய்தது.

விடுதலை செய்ய நடவடிக்கை

இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை இலங்கைப் படைகள் மீண்டும் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை அரசை தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கச்சத்தீவை மீட்கவும், மீனவர்கள் நலன் காக்க தனி அமைச்சகத்தை அமைக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story