அ.தி.மு.க.வில் எந்த தொண்டனும் முதல்-அமைச்சராக முடியும் தி.மு.க.வில் தொண்டர்கள் தலைமை பொறுப்பு வகிக்க முடியுமா? தேர்தல் பிரசாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் கேள்வி


அ.தி.மு.க.வில் எந்த தொண்டனும் முதல்-அமைச்சராக முடியும் தி.மு.க.வில் தொண்டர்கள் தலைமை பொறுப்பு வகிக்க முடியுமா? தேர்தல் பிரசாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
x
தினத்தந்தி 1 April 2019 5:30 AM IST (Updated: 1 April 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் எந்த தொண்டனும் முதல்- அமைச்சராக முடியும். தி.மு.க.வில் தொண்டர்கள் தலைமை பொறுப்பு வகிக்க முடியுமா? என்று தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, வாணியம்பாடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் ஒன்று கூடி வெற்றுக்கூட்டணி அமைத்துள்ளார்கள். தி.மு.க.-காங்கிரஸ் இரு கட்சிகளும் எந்த ஒரு நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை.

2011-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, 500 ஆண்டு காலம் பயன்தரக்கூடிய வகையில் உள்ள திட்டங்களை ஜெயலலிதா பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் ஏழை-எளிய குடிசைவாழ் மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை-எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆக 2021-க்குள் தமிழகத்தை குடிசை பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற மாநகராட்சிகளாக உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அ.தி.மு.க. 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் இது. இவ்வியக்கத்தில் எந்த தொண்டனும் முதல்-அமைச்சராக வரமுடியும். அ.தி.முக.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக ஆக முடிகிறது. ஆனால் தி.மு.க.வில் எந்தவொரு தொண்டனும் தலைமைப் பொறுப்பு வகிக்க முடியுமா?

இது தர்மத்திற்காக பாடுபடும் கட்சி, இது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. அ.தி.மு.க. எக்கு கோட்டையாக திகழ்கிறது.

ஜெயலலலிதா, பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரமும், பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரமாகவும், தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார்.

மீண்டும் தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தினார். அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். பேறுகால நிதிஉதவி ரூ.6 ஆயிரத்தில் இருந்து, 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இன்று நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம்.

மாணவர்களுக்காக அதிக நிதியை கல்விக்காக, கல்விதுறைக்கு ஒதுக்கி 16 வகையான கல்வி உபகரணங்கள், இலவச பாடப்புத்தகம், இலவச லேப்-டாப், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இத்தகைய உன்னதமான திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர் ஜெயலலிதா என்று சொல்வதற்கு இங்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்பகுதியில் 2007-2011 வரை தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து இருந்து வந்தபோது ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு அவர்களால் தடுக்க முடிந்ததா? ஆனால் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக மின்சாரம் துண்டிப்பே இல்லாத பகுதியாக மாற்றினார் என்பதை நினைவுக்கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

இத்தொகுதியில் மக்களின் முக்கிய பிரச்சினைகளான குடிநீர் பிரச்சினை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கியுள்ள இம்மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதே அ.தி.மு.க. ஆட்சியின் குறிக்கோள்.

ஜெயலலிதா வழியில் நடக்கும் எங்கள் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 60 லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதைப் பொறுத்து கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் உயர்நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றார்கள்.

அ.தி.மு.க. சிறுபான்மையினர் மக்களுக்கான கட்சியாக திகழ்வதால் தான் புனித யாத்திரை மெக்காவிற்கும் மற்றும் ஜெருசலம் செல்வதற்கும், நோன்பு கஞ்சி தயாரிப்பது போன்றவற்றிற்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி, அனைத்து சமுகத்திற்கும் பாதுகாப்பு அரணாக இருந்தவர் ஜெயலலிதா. மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசியை வழங்கும் திட்டத்தினை ஜெயலலிதா அறிவித்தார்.

அ.தி.மு.க ஆட்சி இன்றைக்கும் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது இது அம்மாவின் ஆட்சி, இது மக்களுக்கான ஆட்சி. அவருடைய வழியில் இன்று சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதை தி.மு.க.வினரால் பொறுத்துகொள்ள முடியாமல் பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்கள். தற்போது அமைந்துள்ள மெகா கூட்டணி, மகுடம் ஏற்றும் வெற்றி கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி உடனிருந்தார்.

Next Story