பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: நக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்தது


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: நக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்தது
x
தினத்தந்தி 2 April 2019 5:10 AM IST (Updated: 2 April 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது.

சென்னை,

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய ஆவணங்களையும், ஆதாரங்களையும் சமர்ப்பிக்குமாறு நக்கீரன் கோபாலுக்கு சென்னை மற்றும் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில், ‘சென்னையிலேயே தேவைப்படும் பட்சத்தில் நக்கீரன் கோபாலை விசாரிக்கலாம்’, என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக நேற்று பிற்பகல் 3 மணியளவில் நக்கீரன் கோபால் வந்தார். அவருடன் வக்கீல்கள் இளங்கோவன், சிவகுமார் ஆகியோரும் வந்தனர்.

சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நக்கீரன் கோபாலிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை இரவு 7 மணிக்கு முடிந்தது. 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் நக்கீரன் கோபால் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கொடும கொடுமன்னு கோவிலுக்கு போனால், அங்கு 2 கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்’, என்ற ஒரு பழமொழி உண்டு. சமுதாயத்தில் நடந்த மிகப்பெரிய ஒரு கொடுமையை வெளிக்கொண்டு வந்தோம். ஆனால் ‘ஏண்டா இதை செஞ்சோம்’ என்கிற அளவுக்கு என்னை படாதபாடு படுத்தி விட்டார்கள்.

இன்றைக்கு நடந்த விசாரணையில் 4 பெண்கள், ஒரு ஆண் கொண்ட அதிகாரிகள் குழு என்னை விசாரித்தது. 4 மணி நேரம் என்னை விசாரித்தனர். இந்த விசாரணையில் ‘நீ யார் புலனாய்வு செய்ய?’, என்கிற ரீதியிலே நான் விசாரிக்கப்பட்டேன். நிச்சயமாக யாரையோ காப்பாற்றவே அதிகாரிகள் முயற்சிப்பது நன்றாக தெரிகிறது.

ஒரு பெண்ணை 4 வாலிபர்கள் காயப்படுத்தி ‘பெல்ட்’ டால் அடித்து துன்புறுத்துகிறார்கள். அந்த வீடியோவை பார்க்கும் யாருக்கும் கோபம் தீயாக வரும். அப்படி எழுந்த மக்களின் கோபத்தையே நானும் வீடியோவில் வெளியிட்டு யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்தேன்.

அந்த வீடியோக்களை யார் கொடுத்தது? அந்த வீடியோவில் இருப்பவர்கள் யார்?, மேலும் தொடர்புடையவர்கள் யார்? என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்துவிட்டனர். நான் எப்படி அதை சொல்லமுடியும்? சமுதாயத்தில் பெரிய புள்ளி ஒருவர் கூட தனது 2-வது மனைவியை இந்த பிரச்சினையில் இருந்து மீட்டெடுக்க பல லட்சங்களை தாரைவார்த்திருக்கிறார்.

நம்பிக்கைக்குரிய நபர்கள் அளித்த சாட்சியங்கள் அடிப்படையில் தான் செய்தி வெளியிடுகிறோம். பொள்ளாச்சி விவகாரத்தில் நானும் தொடர்புடையவன் என்ற ரீதியில் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது தான் கொடுமை.

நித்தியானந்தா, நிர்மலாதேவி போன்ற பரபரப்பான விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இந்த பொள்ளாச்சி விவகாரத்தை ஏண்டா கையில் எடுத்தோம் என்று எண்ணும்படி செய்துவிட்டார்கள்.

விசாரணை முடிந்து வெளியே செல்கையில், ‘விசாரணையின்போது நடந்தவற்றை வெளியே சொல்லக்கூடாது’, என்று ஒரு பெண் அதிகாரி மிரட்டல் விடுத்தார்.

மேலும் விசாரணையின்போது ஒரு சம்மன் கொடுத்து, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக எல்லா விவரங்களையும் குறிப்பிட்டு 3-ந்தேதிக்குள் கொடுக்க சொன்னார்கள்.

விசாரணையின்போது விசாரணை அளிப்பவரை துன்புறுத்தக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால் அதை போலீசார் மீறிவிட்டனர். இதுகுறித்து சட்டரீதியாக நான் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story