பார்வையற்ற மகனுடன் தம்பதி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


பார்வையற்ற மகனுடன் தம்பதி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 3 April 2019 3:45 AM IST (Updated: 3 April 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

பார்வையற்ற மகனுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

சேலம், 

சேலம் குகை அருகே உள்ள ஆறுமுகபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 77). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்தார். வயது முதிர்வு காரணமாக தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருடைய மனைவி புஷ்பா (69).

இவர்களது மகன்கள் பாபு (42), வெங்கடேஷ் (40). பாபு சிறு வயதில் இருந்தே கண் பார்வையற்றவர். இதனால் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வெங்கடேஷ் சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டதால், மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

கதறி அழுதார்

இந்த நிலையில் சிவராமன், புஷ்பா, பாபு ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்க சென்றனர். ஆனால் அவர்கள் வீட்டை பூட்டவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது சிவராமன், புஷ்பா ஆகியோர் ஒரு அறையிலும், பாபு கழிவறை பக்கத்திலும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு பதறியடித்துக்கொண்டு வந்தார். அப்போது வீட்டுக்குள் தாய், தந்தை, அண்ணன் ஆகிய 3 பேர் பிணமாக கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

உருக்கமான கடிதம்

பின்னர் இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர்கள் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தொடர்ந்து 3 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவராமன் வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிவராமன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

பாரமாக இருக்க விரும்பவில்லை

அந்த கடிதத்தில், ‘கடந்த பல ஆண்டுகளாக சேமித்து வைத்த ரூ.4¾ லட்சத்தை வைத்து கொண்டு பார்வையற்ற மகன் மற்றும் மனைவியுடன் வாழ்ந்து விடலாம் என்று நினைத்தேன். இதனால் அந்த பணத்தை செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு கொடுத்தேன். சில மாதம் அவர் வட்டி கொடுத்தார். அதை வைத்து மனைவி, மகனுடன் வாழ்க்கை நடத்தி வந்தேன். இந்த நிலையில் அவர் வட்டி தர மறுத்தார். எனவே கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி அவரிடம் பலமுறை கேட்டேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவரிடம் பணத்தை கேட்டேன். அப்போது என்னை அவமரியாதையாக பேசினார். இதனால் மனம் உடைந்து போனேன். இந்த உலகில் யாருக்கும் நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே என்னிடம் பணம் வாங்கிய சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை திரும்ப பெற்று, அதை எனது மகன் வெங்கடேசிடம் ஒப்படைக்கவும்’ என்று எழுதப்பட்டு இருந்தது.

தலைமறைவு

இது குறித்து போலீசார் கூறும்போது, சிவராமன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் அவரிடம் கடன் பெற்றவர் பெயரை குறிப்பிட்டு உள்ளார். அதை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டார். இதையொட்டி அவரை தேடி வருகிறோம். அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்படும்.

Next Story