காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினருக்கு இடமில்லை மதச்சார்பின்மை பற்றி பேச தி.மு.க. கூட்டணிக்கு தகுதி இல்லை ஜி.கே.வாசன் பேச்சு


காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினருக்கு இடமில்லை மதச்சார்பின்மை பற்றி பேச தி.மு.க. கூட்டணிக்கு தகுதி இல்லை ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 3 April 2019 4:30 AM IST (Updated: 3 April 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினருக்கு இடமில்லை. எனவே மதச்சார்பின்மையை பற்றி பேசுவதற்கு தி.மு.க. கூட்டணிக்கு தகுதி இல்லை என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் வைதியநாதன், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்;-

‘தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் இந்திய நாட்டிற்கு முக்கியமான தேர்தல் ஆகும். எங்களது வெற்றி கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் மட்டும் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.

சிறுபான்மையினருக்கு வாய்ப்பில்லை

அப்படி பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே தமிழகம் உள்பட மற்ற மாநிலங்கள் வளர்ச்சி அடைய முடியும். மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மதச்சார்பின்மையை பற்றி பேசுகிறார்கள். அதற்கு அவர்கள் தகுதி அற்றவர்கள்.

தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. ஒத்த கருத்துடைய மத்திய, மாநில ஆட்சிகள் இருந்தால் மட்டுமே நாட்டை வளப்படுத்த முடியும், மத்தியில் பா.ஜனதா ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் தொடர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார்.

கூட்டத்தில் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், த.மா.கா. மாநில செயலாளர் தாம்பரம் வேணுகோபால், மாவட்ட தலைவர் மணி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story