டைரக்டர் மகேந்திரன் மரணம் நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி
சிறுநீரக கோளாறு காரணமாக சினிமா டைரக்டர் மகேந்திரன் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை,
‘முள்ளும் மலரும்,’ ‘உதிரிப்பூக்கள்,’ ‘ஜானி,’ ‘கை கொடுக்கும் கை,’ நெஞ்சத்தை கிள்ளாதே’ உள்பட தமிழ் திரையுலகுக்கு காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள் போன்ற திரைப்படங்களை கொடுத்தவர், மகேந்திரன். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரினால் தமிழ் திரையுலகுக்கு அடையாளம் காட்டப்பட்டவர், இவர். 1978-ம் ஆண்டில், ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’ படத்துக்கு கதை-வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானார். சிவாஜி நடித்த ‘ஹிட்லர் உமாநாத்’ படத்துக்கும் கதை-வசனம் எழுதினார். மற்றும் ‘நிறைகுடம்,’ மற்றும் ‘சபாஷ் தம்பி,’ ‘திருடி’ உள்பட பல படங்களுக்கும் வசனம் எழுதியிருந்தார். 2006-ம் ஆண்டில் வெளியான ‘சாசனம்’ என்ற படம்தான் இவர் டைரக்டு செய்த கடைசி படம். இந்த படத்தில் அரவிந்தசாமி, கவுதமி, ரஞ்சிதா ஆகியோர் நடித்தார்கள்.
விஜய்யுடன்...
சில வருடங்களாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த மகேந்திரன், விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மூலம் நடிகர் ஆனார். அந்த படத்தில் அவர் கொடூரமான வில்லனாக நடித்தார். அவருடைய நடிப்பு அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து, ‘நிமிர்,’ ‘மிஸ்டர் சந்திரமவுலி,’ ‘சீதக்காதி,’ ‘பேட்ட’ ஆகிய படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். கடைசியாக, கரு.பழனியப்பன் டைரக்டு செய்து வரும் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில், அருள்நிதியுடன் நடித்து வந்தார்.
ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மரணம்
அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இதற்காக அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு, ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டது. வயது அதிகமாகி விட்டதால், ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை. அதைத்தொடர்ந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது.
நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று காலை 6.30 மணிக்கு டைரக்டர் மகேந்திரன் மரணம் அடைந்தார்.
உடல் அடக்கம்
அவருடைய உடல் பள்ளிக்கரணையில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பார்த்திபன், நடிகைகள் ராதிகா சரத்குமார், ரேவதி, டைரக்டர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், லிங்குசாமி, சசிகுமார், பாலாஜி சக்திவேல், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மகேந்திரன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னை மந்தவெளியில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லறை தோட்டத்தில், மகேந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
குடும்பம்
மரணம் அடைந்த டைரக்டர் மகேந்திரனுக்கு வயது 79. அவருடைய மனைவி பெயர், ஜாஸ்மின். இவர்களுக்கு ஜான் என்ற மகனும், டிம்பிள், அனு ஆகிய 2 மகள்களும் இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story