அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது நர்ஸ் பாலியல் புகார் 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
மன்னார்குடியில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது நர்ஸ் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக டாக்டர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் மணவழகன் (வயது 52). இவர், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவராகவும், திருவாரூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.
இவர் மன்னார்குடி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய நர்ஸ் ஒருவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், செல்போனில் அடிக்கடி பாலியல் ரீதியாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட நர்ஸ், திருவாரூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேலிடம் புகார் அளித்தார்.
பணியிட மாற்றம்
அதன் அடிப்படையில், டாக்டர் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் விசாகா கமிட்டியினர் துறை ரீதியான விசாரணையை தொடங்கி டாக்டர் மணவழகனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு, டாக்டர் மணவழகன், தலையாமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் மற்றும் 3 கார்களில் வந்த பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஆகியோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் டாக்டர் மணவழகன் மீது பாலியல் புகார் அளித்தனர். அதன்பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் டாக்டர் மணவழகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து வேறுபாடு
அதே நேரத்தில், மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நிர்வாகிகள், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேலை சந்தித்து டாக்டர் மணவழகன் மீது ஆதாரம் இல்லாமல் புகார் அளிக்கக்கூடாது என முறையிட்டனர்.
இது குறித்து டாக்டர் மணவழகன் தரப்பில் கூறுகையில், டாக்டர் மணவழகனுக்கும், இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் நர்ஸ் ஒருவரை பயன்படுத்தி ஸ்டான்லி மைக்கேல் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story