ஆதார் அட்டையை அடமானமாக வைத்துக்கொண்டு தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்க வேண்டும் வங்கி அதிகாரியிடம், நாமக்கல் வேட்பாளர் மனு
தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்க வங்கி அதிகாரியிடம், நாமக்கல் வேட்பாளர் மனு கொடுத்தார்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள மேற்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் காந்தி வேடமிட்டு நாமக்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் முதுநிலை மேலாளரிடம் மனு ஒன்றை வழங்கினார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் ரூ.70 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி கொடுத்துள்ளது. விளம்பரம் செய்வது, துண்டு பிரசுரங்கள் வழங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் எனக்கு ரூ.50 லட்சம் தேர்தல் செலவிற்காக கடன் வழங்கி, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வங்கி உதவிட வேண்டும். நான் வெற்றி பெற்றவுடன் கிடைக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை கொண்டு ஒரு பைசா பாக்கி இல்லாமல் கடனை திருப்பி கட்டாயம் செலுத்துவேன்.
என் ஆதார் அட்டையை அடமானமாக வைத்துக்கொள்ளுங்கள். நான் 32 முறை வெளிநாடுகளுக்கு பயணம் சென்று இருப்பதால் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடுவேன் என்ற பயம் வங்கிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக என்னுடைய பாஸ்போர்ட் அசலை தங்கள் வசம் ஒப்படைக்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story