நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் எப்போது? பிரேமலதா பதில்
நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் எப்போது? என்று பிரேமலதா பதில் அளித்துள்ளார்.
சிதம்பரம்,
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிதம்பரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதை முடித்துவிட்டு சிதம்பரத்தில் அவர் தங்கினார்.
தொடர்ந்து நேற்று காலை பிரேமலதா விஜயகாந்த் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பொது தீட்சிதர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விஜயகாந்த் பிரசாரம்
தமிழகம் முழுவதும் உள்ள எல்லா தொகுதிகளிலும் மிகப்பெரிய எழுச்சியை பார்க்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் வரவேற்கின்றனர். இந்த கூட்டணி மெகா கூட்டணி. மக்களின் ஆதரவு ஒவ்வொரு தொகுதியிலும் அமோகமாக இருக்கிறது.
உறுதியாக 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் பற்றி தகவலை தலைமை கழகம் அறிவிக்கும். இந்த கூட்டணி தர்மத்தோடு நடக்கிறது.
பிரதமர் வேட்பாளர் யார்?
தற்போது காங்கிரஸ் கட்சியில் நிறைய வாக்குறுதிகளை அள்ளிவீசி இருக்கின்றனர். அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் உள்ளது. எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று ஆணித்தரமாக சொல்வோம், அதை மக்களிடம் சொல்லி பிரசாரம் செய்து வருகிறோம். ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை. இதுவே மக்களிடம் மிக பெரிய கேள்வியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story