அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு எதிரான புகார் பரிசீலிக்கப்படும் ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு எதிரான புகார் பரிசீலிக்கப்படும் ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 4 April 2019 3:45 AM IST (Updated: 4 April 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதியை மீறி அ.தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் பரிசீலிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறியது.

சென்னை,

தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த வி.பி.அமாவாசை என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் அறிக்கை

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வருகிற 18-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ‘வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்’ என கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடாது என ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகளில் உள்ளது.

அரசுக்கு கடன்

இந்த சூழலில் அந்த விதிகளை மீறி ரூ.1,500 நிதியுதவி திட்டம் அறிவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் 20-ந்தேதி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே தமிழக அரசு ரூ.3.5 லட்சம் கோடி கடனில் சிக்கி தவிப்பதாக தமிழக நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், மக்களை தேர்தல் நேரத்தில் திசை திருப்பும் நோக்கில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது சட்டவிரோதம் என்பதால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பரிசீலிக்கப்படும்

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குதாரர் அளித்த புகார் குறித்து பரிசீலிக்கப்படும் என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்குதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆஜராக இருப்பதாக தெரிவித்ததால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று (வியாழக்கிழமை) தள்ளி வைத்தனர்.

Next Story