திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை


திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 4 April 2019 5:45 AM IST (Updated: 4 April 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற அரசு பஸ்சில், கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடியை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

தர்மபுரி,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பறக்கும் படை அதிகாரிகள்

இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன. தேர்தல் நாள் நெருங்கி வருவதால் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

அரசு பஸ்சில் சோதனை

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே நரிப்பள்ளியை அடுத்த பையர்நாயக்கன்பட்டி கூட்ரோட்டில் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி செயற்பொறியாளர் சண்முகம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசாரை கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பஸ்சில் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.

கட்டுக்கட்டாக பணம்

அந்த பைகளை அதிகாரிகள் எடுத்து திறந்து பார்த்தபோது, அவற்றில் பேப்பர்களில் சுற்றப்பட்டு 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பஸ்சில் இருந்தவர்களிடம், அந்த பணம் யாருடையது? என்று அதிகாரிகள் கேட்டபோது, தங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டனர்.

அனாதையாக கிடந்த பணத்துக்கு யாரும் உரிமை கோராததால் பறக்கும் படை அதிகாரிகள், பைகளில் இருந்து பணத்தை கைப்பற்றி, அங்கிருந்து எடுத்துச் சென்று அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.3½ கோடி

பைகளில் இருந்த பணம் முழுவதையும் அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது, மொத்தம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 இருந்தது. அந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அந்த பஸ்சில் பயணம் செய்த செல்வராஜ் என்ற பயணியை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர், அந்த பணத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறியதை அடுத்து, அவரை விடுவித்தனர்.

பணம் இருந்த ஒரு பையில் பாரத ஸ்டேட் வங்கி கணக்கு புத்தகம் (பாஸ் புக்) ரமேஷ் என்ற பெயரில் இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா?

கார் போன்ற பிற வாகனங்களில் கொண்டு சென்றால் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், அரசியல் கட்சியினர் யாராவது அரசு பஸ்சில் பணத்தை கொண்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அரசு பஸ்சில் சுமார் ரூ.3½ கோடி சிக்கிய சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story