மக்களுக்கு பரிசு கொடுத்து வாக்குகளை பெற தி.மு.க. முயற்சிக்கிறது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


மக்களுக்கு பரிசு கொடுத்து வாக்குகளை பெற தி.மு.க. முயற்சிக்கிறது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 April 2019 5:00 AM IST (Updated: 5 April 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு பரிசு கொடுத்து வாக்குகளை பெற தி.மு.க. முயற்சிக்கிறது என்று நெல்லையில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நெல்லை,

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வள்ளியூர், நாங்குனேரி, நெல்லை, வாகையடி ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, பேசியதாவது:-

வலிமைமிக்க தலைவர் மோடி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க., அந்த இருபெரும் தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை அடிப்படையாக கொண்டுதான் இந்த அரசும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா கட்சி 1 இடத்திலும், பா.ம.க. 1 இடத்திலும் வெற்றிபெற்று 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

அதேபோன்று இப்போழுது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்த நாட்டிற்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு திறமை மிக்க வலிமையான தலைவர் மிக அவசியம் அந்த தகுதியுடைய ஒரே தலைவர் நரேந்திரமோடி தான். அவர் பிரதமராக இருந்தால் தான் இந்தியா பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்.

சந்தர்ப்பவாதம்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் எனத்தெரிவித்தார். ஆனால், மற்ற எதிர்க்கட்சித்தலைவர்கள் எல்லாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அந்த கூட்டணியில் உள்ள வைகோ, தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லி தான் வெளியே சென்றார். எந்த காலத்திலும் தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது எனவும், மு.க.ஸ்டாலின் ஒரு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் எனவும் கூறினார். ஆனால் தற்போது மீண்டும் இந்த கூட்டணியுடன் சேர்ந்து கொண்டு, மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக்கி, ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பேன் எனப் பேசிவருகிறார். அதுவும் தற்போது ஈரோட்டில் தி.மு.க. சின்னத்தில் வைகோ கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவ்வாறாக கருத்து உடன்பாடு இல்லாமல் ஏற்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பவாத கூட்டணி தான் தி.மு.க. கூட்டணி.

வெற்று அறிக்கை

தமிழர் திருநாளான தைப்பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரூ.1000 வழங்கக் கூடாது என தி.மு.க. கெட்ட எண்ணத்துடன் நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் நீதிமன்றம் ரூ.1000 வழங்க தடையில்லை என அறிவித்ததன் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அதேபோன்று, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என நான் அறிவித்தேன். ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து, தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. அளித்துள்ள தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கையாகும். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்ற முடியாது. கடந்த 2006-ம் ஆண்டு அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நிலமில்லாத விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதை எத்தனை பேருக்கு வழங்கினார்கள். இது போன்று பொய்யான தேர்தல் அறிக்கையை அறிவித்து அவர்களை குழப்பமடையச் செய்கிறார்கள். இதை செய்கிறோம், அதைச் செய்கிறேன் என நாடகம் நடத்தி வருகிறார். அவர்களால் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது.

பரிசு கொடுத்து...

மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் மட்டும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை குழப்பி ஓட்டுக்களை பெற நினைக்கிறார். அதுமட்டுமின்றி தற்போது தி.மு.க. மக்களுக்கு பரிசு கொடுத்து ஓட்டுக்களை பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் மகன் நிற்கும் தொகுதியில் 30 கிலோ தங்க நாணயம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தி வெளியாகியுள்ளது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். நீங்கள் என்ன செய்தாலும் வாக்குகளை பெற இயலாது.

தமிழக மக்களின் நலன் ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டும் வரும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story