அ.தி.மு.க. பேனர்களை அ.ம.மு.க.வினர் கிழித்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.கே.மூக்கையாத்தேவரின் 97-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.
மதுரை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.கே.மூக்கையாத்தேவரின் 97-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் உள்ள மூக்கையாத்தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் அங்கு அ.தி.மு.க. சார்பில் அந்த கல்லூரி முன்பு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
சாலை மறியல்
அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தேவர் கல்லூரியில் உள்ள மூக்கையாத்தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தனர். அப்போது கல்லூரி முன்பாக அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்த அ.ம.மு.க. வினர், தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.
பேனர்கள் அகற்றப்படாததால் ஆத்திரம் அடைந்த அ.ம.மு.க.வினர் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று தெரிவித்து, பேனரை அகற்றக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேனர்கள் கிழிப்பு
இந்த சாலை மறியலால் உசிலம்பட்டி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அ.ம.மு.க.வினரிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்து, கல்லூரி முன்பு வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. வின் 2 பேனர்களை கிழித்தெறிந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story