வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய போலீஸ் வாகனங்களிலேயே பண மூட்டைகள் தி.மு.க. பரபரப்பு குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக அ.தி.மு.க. தரப்பு பண மூட்டைகளை போலீஸ் வாகனங்களிலேயே எடுத்துச்செல்வதாக தி.மு.க. பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறது.
சென்னை,
தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;-
பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் எல்லாம் உத்தமபுத்திரர்கள், ஒழுக்க சீலர்கள் என வாக்காளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, மத்திய வருமான வரித்துறை ஏவப்பட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை மட்டும் குறி வைத்து பணம் கைப்பற்றப்பட்டதாக சித்தரித்து வாக்காளர்களை திசை திருப்பவும் குழப்பம் ஏற்படுத்தவும், தேர்தலையே ரத்து செய்யவும் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் அ.தி.மு.க. வின் கோடி கோடியான பண மூட்டைகள் போலீசார் வாகனங்களிலேயே குறிப்பாக உளவுத்துறை வாகனங்களிலேயே எடுத்துச்சென்று வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அனுமதியோடு இந்த வேலை ஜரூராக நடைபெறுகிறது. இதை தி.மு.க. கூட்டணி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக் காது.
மிகுந்த கண்காணிப்புடன்...
எனவே தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் சாலைகளில் செல்லும் போலீஸ் வாகனங்கள் குறித்த தகவலை உடனுக்குடன் தேர்தல் அதிகாரிகள்-பார்வையாளர்களுக்கு தெரிவித்து, அந்த வாகனங்களை சோதனையிட செய்யுங்கள். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி பொது அமைதிக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாதவாறு குறுகிய நேர ஆர்ப்பாட்டம் நடத்துங்கள்.
கூட்டணி கட்சி தோழர்கள் இரவும் பகலும் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து, தேர்தல் பணியில் எவ்வித தொய்வும் ஏற்பட்டு விடாமல், உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயலாற்ற வேண்டும். தங்களை காப்பாற்றி கொள்ளவும், லாப நோக்கத்தோடும் தேர்தல் மோசடிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் காலம் தரும் கடும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்ப முடியாது என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story