எடை குறைவாக பொருட்கள் வினியோகம் என புகார்: ரே‌ஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு


எடை குறைவாக பொருட்கள் வினியோகம் என புகார்: ரே‌ஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 6 April 2019 1:00 AM IST (Updated: 5 April 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

விற்பனையாளர்கள் எடைபோட்டு வழங்கும் 10 கிலோ அரிசியில் குறைந்தது 1 கிலோ அரிசி குறைவாக காணப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சென்னை, 

கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பெ.சுபாஷினி அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் சென்னையில் உள்ள இணைப்பதிவாளர்களுக்கு (பொது வினியோகத் திட்டம்) அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ரே‌ஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணியின்போது, கண்டறியப்பட்ட சில குறைகளில், ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் அறிவிப்பு பலகையில் என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கின்றன என்பதை பதிவு செய்யவில்லை என்றும், விற்பனையாளர்கள் எடைபோட்டு வழங்கும் 10 கிலோ அரிசியில் குறைந்தது 1 கிலோ அரிசி குறைவாக காணப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

10 கிலோவுக்கு 1 கிலோ குறைவு என்பது 10 சதவீத எடை குறைவு ஆகும். எனவே, இதுபோன்ற புகார்களுக்கு இடம் அளிக்காமல், எடை குறைவின்றி அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வசதியாக ரே‌ஷன் கடை ஆய்வு பணிகளின் போது, கூட்டுறவு சார்பதிவாளர் அல்லது துணை பதிவாளர் ஆகியோர் ஒவ்வொரு ரே‌ஷன் கடையிலும் குறைந்தது 5 மறு எடை ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story