பட்டாசு தொழிலாளர்களை காக்க அ.தி.மு.க. அரசு என்றும் துணை நிற்கும் எடப்பாடி பழனிசாமி பேச்சு


பட்டாசு தொழிலாளர்களை காக்க அ.தி.மு.க. அரசு என்றும் துணை நிற்கும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 5:00 AM IST (Updated: 6 April 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அ.தி.மு.க. அரசு என்றும் துணை நிற்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விருதுநகர், 

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.அழகர்சாமி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டிற்கு தேவை, வலிமை மிக்க உறுதியான தலைமை. அந்த தலைமைக்கு தகுதியானவர் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி தான். இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான், அ.தி.மு.க., பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணி மெகா கூட்டணி, வெற்றிக்கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி ஆகும்.

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

நாடு பாதுகாப்பாக இருந்தால் தான், நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடையும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் தனக்கென வாழாமல், நாட்டுக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்கள் ஆற்றிய பணிகள் இன்னும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்குத் தேவையான திட்டங்கள் பற்றி பேசி வாக்கு கேட்காமல் என்னையும், கூட்டணிக் கட்சி தலைவர்களையும் பற்றி மட்டுமே பேசி வாக்கு சேகரித்து வருகிறார். ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது எந்த மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை, தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதனால் தான் எங்களை பற்றி குறை கூறி வாக்கு சேகரிக்கிறார்.

கொள்கை சார்ந்த நிலைப்பாடா?

வேலூரில் தி.மு.க. நிர்வாகிகள் வீட்டில் வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்ட பணம் பற்றி ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார். தற்போது, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, தி.மு.க. ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி என விமர்சித்தார். அதேபோன்று ஸ்டாலின் ஒரு கவுன்சிலர் ஆகக் கூட தகுதியில்லாதவர் எனக் கூறிய வைகோ, தற்போது ஸ்டாலின் தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக வரவேண்டும் எனக்கூறுகிறார். இதுதான் ஒரு கட்சியின் கொள்கை சார்ந்த நிலைப்பாடா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

“கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள்” தி.மு.க.வினர். விஞ்ஞான ரீதியாக ஊழல் புரியும் கட்சி தி.மு.க. பொய் பேசியே மக்களை ஏமாற்றுபவர்கள் தி.மு.க.வினர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்குகளைப் பெற்று விடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை

அ.தி.மு.க.வை உடைக்கவும், அ.தி.மு.க. அரசை கலைக்கவும் தொடர்ந்து முயற்சி செய்கிறார். அ.தி.மு.க. இயக்கம் வலிமையான, உறுதியான கட்டுக்கோப்பான தொண்டர்களைக் கொண்ட ஒரு பேரியக்கம். இதை யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது. ஏழை, எளிய மக்களின் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி என்றாலே, எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு தான். அந்த பட்டாசு தொழிலை இந்த அரசு பாதுகாக்கும். அதாவது, பட்டாசு உற்பத்தி செய்யும் உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அரசின் சார்பில் தனியாக ஒரு வழக்கறிஞரை நியமித்து சுப்ரீம் கோர்ட்டிலே வாதாடி, பட்டாசு தொழில் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலவச மின்சாரம்

ஒருமித்த கருத்துடைய கட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் தான் அந்த மாநிலத் திற்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முடியும். அதனடிப்படையிலே தான் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் அந்த தொகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்றிட வேண்டும்.

அவ்வாறு கட்சி நிர்வாகிகளின் பெரும் உழைப்பால் வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றாமல் துரோகத்திற்கு இடமளித்ததன் காரணமாக சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக் கிறது. துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story