நாடு முழுவதும் 759 பேர் தேர்ச்சி: சிவில் சர்வீசஸ் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு


நாடு முழுவதும் 759 பேர் தேர்ச்சி: சிவில் சர்வீசஸ் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு
x
தினத்தந்தி 6 April 2019 4:45 AM IST (Updated: 6 April 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

சென்னை, 

சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 759 பேர் தேர்வு ஆகியுள்ளனர். இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு 812 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்று தேர்வு முடிவு ஜூலையில் வெளியானது. இதில் நாடு முழுவதும் 9 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 432 பேர் தேர்வாகினர்.

முடிவு வெளியீடு

அதை தொடர்ந்து முதன்மை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கி அக்டோபர் 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கி மார்ச் 29-ந்தேதி வரை டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இறுதி தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் 759 பேர் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர்.

பொதுப்பிரிவில் 361 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் 209 பேரும், எஸ்.சி. பிரிவில் 128 பேரும், எஸ்.டி. பிரிவில் 61 பேரும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் மத்திய அரசு பணிகளில் குரூப்-ஏ, குரூப்-பி உள்ளிட்ட பதவிகளில் அமர உள்ளனர்.

மனிதநேய மையம்

இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து சைதை துரைசாமியின் மனித நேய மைய இயக்குனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேர்முகத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்தால் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தீவிர பயிற்சி அளித்தோம். திறமைமிக்க வல்லுநர்களை கொண்டு உளவியல் ரீதியாக சென்னை, டெல்லியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, டெல்லி சென்று வர விமான டிக்கெட், அவர்களின் குடும்பத்தினருடன் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வசதி, யு.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு சென்றுவர வாகன வசதி மற்றும் அவர்களுக்கு தேவையான உணவு, உடை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.

30 பேர் வெற்றி

மனிதநேய மையத்தின் வாயிலாக நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்களில் 30 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 18 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள். ரிஷப் என்பவர் அகில இந்திய அளவில் 23-வது இடமும், ரெஜினாமேரி 49-வது இடமும், தீபனா விஸ்வேசரி 117-வது இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Next Story