உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறி பொது அமைதியை கெடுக்க தி.மு.க. முயற்சி அ.தி.மு.க. புகார்


உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறி பொது அமைதியை கெடுக்க தி.மு.க. முயற்சி அ.தி.மு.க. புகார்
x
தினத்தந்தி 7 April 2019 12:15 AM IST (Updated: 6 April 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறி பொது அமைதியை கெடுக்க தி.மு.க. முயற்சி செய்வதாக அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.

சென்னை, 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் கொடுத்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தி.மு.க. வெளியிட்ட அறிவிப்பில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக தமிழக காவல்துறை வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்பட்டு வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அதை கண்காணித்து பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு, பறக்கும் படையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களைத் திரட்டி அந்த வாகனத்தை மறித்து, சாலை மறியல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது மக்களிடையே அமைதியைக் கெடுத்து கலவரத்தை உண்டாக்க முயற்சிக்கின்றனர்.

எனவே உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுக்களை கூறும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சிலர் உணவு நிறுவன ஊழியர்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் பணத்தை கொண்டு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story