மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மரணம் தலைவர்கள் இரங்கல்


மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மரணம் தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

60 ஆண்டுகள் சிலப்பதிகாரம் பற்றி பேசிவந்த மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் நேற்று காலமானார்.

சென்னை, 

60 ஆண்டுகள் சிலப்பதிகாரம் பற்றி பேசிவந்த மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிலம்பொலி செல்லப்பன்

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது மகன் கொங்குவேள் வீட்டில் வசித்துவந்தார். வயோதிகம் காரணமாக ஏற்பட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றபடி ஓய்வு எடுத்துவந்தார். நேற்று காலையில் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.

அவரது உடலுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். சிலம்பொலி செல்லப்பன் உடல் இன்று (ஞாயிற்றுக் கிழமை) அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

சிலம்பொலி செல்லப்பனுக்கு தொல்காப்பியன், கொங்குவேள் என்ற 2 மகன்களும், மணிமேகலை, கவுதமி, நகைமுத்து என்ற 3 மகள்களும் உண்டு. அவரது மனைவி செல்லம்மாள், மகன் தொல்காப்பியன் ஆகியோர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டனர்.

பாரதிதாசன் விருது

சிலம்பொலி செல்லப்பன் சிவியாம்பாளையத்தில் 1928-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி சுப்பராயன்-பழனியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். கணித ஆசிரியராக பணியை தொடங்கிய அவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர், உலக தமிழ் மாநாட்டு உதவி அதிகாரி பதவிகளை வகித்தவர்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க பாடுபட்டவர்களில் இவருக்கும் பங்கு உண்டு. தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றார்.

‘தினத்தந்தி’ சார்பில் விருது

சிலப்பதிகாரத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக 60 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில் சிலப்பதிகாரத்தை பற்றி பேசி உள்ளார். பல புத்தகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதி உள்ளார்.

சிலம்பொலி செல்லப்பாவின் தமிழ் பணிகளை பாராட்டி 2009-ம் ஆண்டு ‘தினத்தந்தி’ சார்பில் அவருக்கு ‘மூத்த தமிழறிஞர்’ விருது வழங்கப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது, மலேசிய தமிழ் சங்க விருது, கம்பன் புகழ் விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

தலைவர்கள் இரங்கல்

சிலம்பொலி செல்லப்பனின் உடலுக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முரசொலி செல்வம், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தென்சென்னை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு பெருந்துயருக்குள்ளானேன். அவரின் மறைவுக்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, டாக்டர் மைத்ரேயன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கவிஞர் வைரமுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், கவிஞர் பொன்னடியான் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story