தமிழகத்தில் இதுவரை ரூ.105 கோடி, 803 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் இதுவரை ரூ.105.72 கோடி, 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் இதுவரை ரூ.105.72 கோடி, 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
ரூ.105 கோடி பறிமுதல்
தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை ரூ.105.72 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.227.45 கோடி மதிப்புள்ள 803 கிலோ தங்கம், 478 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 5-ந் தேதி மட்டும் கோவையில் 149 கிலோ தங்கம் பிடிபட்டது. தூத்துக்குடியில் ரூ.37 லட்சம், தர்மபுரியில் ரூ.1.5 கோடி பிடிபட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக 3,246 வழக்குகளும், பணம், பரிசு பொருள் வழங்கியதாக 302 வழக்குகளும், தேர்தல் விதிமீறல் குற்றத்துக்காக 291 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தேர்தல் நடவடிக்கை தொடர்பாக 3,839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன.
புகார்கள் மீது நடவடிக்கை
அதிகாரிகள் இடமாற்றம், முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் கட்சி தலைவர்களின் பிரசாரம் தொடர்பாக புகார்கள் வருகின்றன. அதுபோன்ற புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை சரிபார்க்க வேண்டியுள்ளதால் காலம் ஆகிறது.
பின்னர் அந்த குற்றச்சாட்டின் தன்மைக்கு ஏற்ப கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. எங்களிடம் தரப்படும் புகார் மனுக்களை கிடப்பில் வைப்பதில்லை, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அன்புமணி பேச்சு
அவதூறாக பேசுவது பற்றிய புகார்களில் தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காக அவதூறு வழக்கு களை தாக்கல் செய்யலாம்.
வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் தூண்டும் வகையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அந்த புகார் அனுப்பப்படும். அவரது பேச்சு தொடர்பான வீடியோ ஆய்வு செய்யப்பட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.
எம்.ஜி.ஆர். பெயர்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டுவதாக தமிழக தலைமை செயலாளர் அரசிதழை வெளியிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது பிரதமரால் அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ரெயில்வே துறை நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர் அந்த அரசிதழ் வெளியிடப்பட்டு இருக்கலாம்.
‘சி விஜில்’ மூலம் 1,770 புகார்கள் வந்தன. அவற்றில் 735 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1,005 புகார்கள் கைவிடப்பட்டன. தேர்தல் பிரசாரங்களுக்கு வாகனங்களில் வாக்காளர்களை அழைத்துச் செல்வது, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பிரசாரம் செய்வது, மதரீதியாக பேசுவது உள்ளிட்ட புகார்கள் அதில் அளிக்கப்பட்டு வருகின்றன.
150 கம்பெனி துணை ராணுவம் விரைவில் வர உள்ளது. அவை தமிழகத்தின் 4 மண்டலங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். அதிகபட்சமாக வேலூருக்கு 10 கம்பெனி துணை ராணுவம் அனுப்பப்படும். விழுப்புரம், மதுரைக்கு தலா 8 கம்பெனி அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story