நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு யாருக்கு? த.வெள்ளையன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு யாருக்கு? த.வெள்ளையன் பேட்டி
x
தினத்தந்தி 6 April 2019 7:45 PM GMT (Updated: 2019-04-07T00:57:37+05:30)

எங்கள் பேரவை சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம். வணிகர் நலனே எங்கள் நோக்கம்.

சென்னை, 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் பேரவை சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம். வணிகர் நலனே எங்கள் நோக்கம். எந்த தேர்தலிலும் இந்த கட்சிக்கு தான் ஆதரவு என்று அறுதியிட்டு எங்கள் பேரவை அறிவித்தது இல்லை. அந்தவகையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒரு புதிய யுக்தியை கையாள உள்ளோம்.

எல்லா கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோள் கடிதத்தை அனுப்பி இருக்கிறோம். வருகிற 10-ந்தேதிக்குள், ‘அன்னிய வணிகத்தை நிச்சயம் நாட்டில் அனுமதிக்க மாட்டோம். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து நமது நாட்டை விடுவிப்போம்’, என்று எழுத்துப்பூர்வமாக கட்சிகள் எங்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அந்தவகையில் கட்சிகளின் நிலைப்பாட்டை பரிசீலித்து வருகிற 12-ந்தேதி, நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் ஆதரவு யாருக்கு?, என்பதை அறிவிப்போம்.

தமிழகத்தில் 45 லட்சம் வணிகர்கள் உண்டு. ஒவ்வொரு வணிகருக்கும் 100 வாடிக்கையாளர்களாவது இருப்பார்கள். அந்தவகையில் மக்களுக்கும், வணிகர்களுக்கும் இடையே நல்ல நட்பு பாலம் உண்டு. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் சார்ந்தே இம்முடிவை மேற்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story