காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசிடம் நிதி இருக்கிறதா? தேர்தல் அறிக்கையை தயாரித்த ப.சிதம்பரம் சிறப்பு பேட்டி


காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசிடம் நிதி இருக்கிறதா? தேர்தல் அறிக்கையை தயாரித்த ப.சிதம்பரம் சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 6 April 2019 11:30 PM GMT (Updated: 7 April 2019 12:30 AM GMT)

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு அரசிடம் நிதி நிலைமை உள்ளதா? என்பது குறித்து, ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியில் ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

மதுரை, 

தினத்தந்திக்கு சிறப்பு பேட்டி

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், சிவகங்கையில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- தி.மு.க-காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட தேர்தல்களில் இந்த அணி ஒரு முறை கூட தோற்றது கிடையாது. எனவே இந்த அணி வெற்றி பெறும்.

வரிசுமை இருக்காது

கேள்வி:- சிவகங்கை தொகுதிக்கு நீங்கள் செய்த சாதனை என்ன? இன்னும் என்ன செய்ய நினைத்தீர்கள்? உங்கள் மகன் எதை செய்வார் என்று உறுதி அளிக்கிறீர்கள்?

பதில்:- சிவகங்கைக்கு என்ன செய்ய போகிறார் என்பதை வேட்பாளரிடம் தான் கேட்க வேண்டும். நான் எவ்வளவோ செய்தாகி விட்டது. இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டும்.

கேள்வி:- உங்கள் தலைமையிலான குழு தயாரித்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றும் அளவிற்கு நிதி நிலைமை இருக்கிறதா? பொருளாதார ரீதியாக சாத்தியம் இருக்கிறதா? எவ்வாறு நிதி திரட்டி இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்?

பதில்:- நான் தெளிவாக சொல்கிறேன். நடுத்தர மக்கள், எளிய மக்கள் மீது வரி சுமை இருக்காது. அரசிடம் வரி வருமானமும் இருக்கிறது. வரியில்லாத வருமானமும் இருக்கிறது. 5 ஆண்டுகளில் நாங்கள் சொன்னவற்றை எல்லாம் நிறைவேற்றுவோம்.

நிதி நிலைமை

கேள்வி:- தற்போதைய அரசின் நிதி நிலைமை நன்றாக இருப்பதால் தான், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுகிறதே?

பதில்:- அப்படியென்றால் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு நிதி நிலைமையை சீரமைத்து கொடுத்தது 10 ஆண்டு கால காங்கிரஸ் அரசு என ஒப்புக்கொள்கிறார்களா? இன்றைய நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா பெற போகும் வளர்ச்சியின் அடிப்படையிலேயே இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும் என்று சொல்கிறோம். நிதி நிலைமை சீராக இருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும் என்று அவர்களும் சொல்லட்டுமே. மாறாக, ஏன் முடியாது என்று சொல்கிறார்கள்?

தேர்தல் வாக்குறுதிகள்

கேள்வி:- உங்கள் தேர்தல் அறிக்கை பொய்யிலான அறிக்கை என்று மோடியும், அபாயகர மானது என்று ஜெட்லியும் கூறுகிறார்களே?

பதில்:- இந்த 2 பேரும் இந்த விமர்சனத்தை தான் செய்வார்கள். அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வதே கிடையாது. நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்றுகிறோமா? என்பதை கடந்த கால வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை அறிவித்த போது அதனை செய்ய முடியாது என்று பா.ஜனதா சொன்னது. ஆனால் நாங்கள் செய்து காட்டினோம். நாங்கள் எது சொன்னாலும் அதனை செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.

சரி, அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தார்களா? ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம், ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்று சொன்னார்கள். எதையும் செய்யவில்லை. சரி சொல்லாத பண மதிப்பிழப்பை ஏன் செய்தார்கள்?

வழக்குகள்

கேள்வி:- காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மத்திய மந்திரிகளில், உங்கள் மீது தான் அதிக வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல் உங்கள் குடும்பத்தினர் மீதும் பல்வேறு வழக்குகள், விசாரணை நடக்கிறதே?

பதில்:- எந்த வழக்கை பற்றியும் நான் கவலைப்படவில்லை. இன்றைய நிலையில் என் மீது 2 எப்.ஐ.ஆர்.கள்தான் இருக்கின்றன. எந்த குற்றப்பத்திரிகையும் கிடையாது. அவர்களுக்கு எங்கள் மீது அபரிமிதமான அன்பு, பாசம். ஆகவேதான் வழக்கு போடுகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பதற்றப்படவில்லை.

கேள்வி:- மோடி கூட உங்களை மறுவாக்கு எண்ணிக்கை (ரீகவுண்டிங்) மந்திரி என்று கூட கடுமையாக விமர்சிக்கிறாரே?

பதில்:- அது அவருடைய அறியாமை.

வறுமை ஒழிப்பு

கேள்வி:- கடந்த 55 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழ்மை பற்றி காங்கிரஸ் பேசும் என்பது பா.ஜனதாவின் முக்கிய பிரசார முழக்கமாக இருக்கிறதே?

பதில்:- அவர்களுக்கு வரலாறும், பொருளாதாரமும் தெரியாது. 1947-ம் ஆண்டு இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தவர்கள் 70 சதவீதம் பேர். அன்றைய தனி நபர் சராசரி வருமானம் 270 ரூபாய். இந்த 70 ஆண்டுகளில், பெருகி கொண்டு இருக்கும் மக்கள் தொகையில் வறுமை கோட்டிற்கு கீழே இருந்த 50 சதவீத மக்களை உயர்த்தி இருக்கிறோம். கடந்த 2004-2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் 14 கோடி மக்களை வறுமை கோட்டில் இருந்து உயர்த்தி இருக்கிறோம்.

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்பதே காங்கிரஸ் கட்சி பெற்றெடுத்த குழந்தைகள். தற்போது எஞ்சியுள்ள 5 கோடி மக்களை உயர்த்துவதற்காக தான் மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தும் புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து இருக்கிறோம்.

பல நாடுகளில்...

கேள்வி:- அரசு பணம் கொடுப்பதால் மட்டும் ஏழைகள், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து விடுவார்களா?

பதில்:- வாழ்வாதாரம் உயரும் என்பது பல அறிஞர்கள் ஆராய்ச்சியிலேயே கண்டுபிடித்தது. இந்த திட்டம் பல நாடுகளிலேயே வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்து இருக்கிறது. இதில் இருந்து பல பாடங்களை அறிஞர்கள் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தின் காரணமாக ஏழைகள் ஏழ்மையில் இருந்து விரைந்து விடுபடுவார்கள்.

ராகுலிடம் தெரிவிப்பேன்

கேள்வி:- அமேதி, வயநாடு தொகுதிகளில் போட்டியிடும் ராகுல்காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் வயநாடு உறுப்பினராகவே தொடர்ந்து நீடிக்க வற்புறுத்திவீர்களா?

பதில்:- உங்களுடைய இந்த கருத்தை நிச்சயம் நான் ராகுலிடம் தெரிவிப்பேன். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதற்கு நாட்டு மக்கள் பெருமை கொள்ள வேண்டும். நான் நரேந்திர மோடியை அழைக்கின்றேன். நீங்களும் வயநாட்டில் அல்லது தென்நாட்டில் வந்து போட்டி போடுங்கள்.

கேள்வி:- சிவகங்கை தொகுதிக்கு நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றும், கார்த்தி சிதம்பரத்தை மீண்டும் தேர்ந்தெடுத்தால் சிவகங்கை பின்தங்கிய தொகுதியாகவே இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?

பதில்:- அதிக அளவில் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அவை அனைத்தையும் நான் மனப்பாடமாக சொல்லுவேன். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை யாரென்றே தமிழக மக்களுக்கு தெரியாது. அவருக்கு சிவகங்கை தொகுதியில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று எப்படி தெரியும்? இங்கு கிராபைட் தொழிற்சாலை வராமல் போனதற்கு காரணம் ஜெயலலிதா ஆட்சி. இந்த தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தான் இருக்கிறார். அவர் என்ன செய்தார்?

அதிக தொகுதிகள்

கேள்வி:- இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

பதில்:- தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெல்லும். இந்திய அளவில் மாநிலத்தின் சூழ்நிலையை பொறுத்து வெற்றி அமையும். நாடு முழுவதும் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்று ஆருடம் சொல்ல முடியாது. அதிக தொகுதிகளிலேயே வெல்ல மிக முனைப்போடு செயல்பட்டு வருகிறோம்.

கேள்வி:- தமிழகத்தில் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அதே போல் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- தமிழகத்தில் எத்தனை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி என்பது ஆருடம். 18 தொகுதி இடைத்தேர்தல் குறித்த முழு விவரம் தெரியாது. ஆனால் மானாமதுரையிலே தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் தான் முன்னணியில் இருக்கிறார்.

தொழில் வளர்ச்சி

கேள்வி:- பா.ஜனதாவுக்கு பதிலாக மக்கள் ஏன் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்?

பதில்:- தமிழன் என்ற முறையிலேயே காரணம் சொல்லுகிறேன். பா.ஜனதா கட்சி என்பது வடநாட்டு ஆதிக்கம் நிறைந்த கட்சி. இந்தி மொழியை திணிக்கும் கட்சி. இந்துத்வாவை பரப்புகின்ற கட்சி. இந்தியாவிலேயே ஒரு மொழி தான் இருக்க வேண்டும் என்கிற கட்சி. மாநிலங்களே கூடாது என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழித்தோன்றல்.

தமிழகத்தை தந்தை பெரியார், காமராஜர், காயிதே மில்லத், அண்ணா, கருணாநிதி ஆகியோர் 100 ஆண்டு காலமாக செதுக்கி வடித்துள்ளனர். நம்முடைய இனத்தின் பெருமையை காப்பாற்றுவதற்கு, தமிழனின் குணத்தை காப்பாற்றுவதற்கு பா.ஜனதா என்ற நச்சு செடியை ஊன்றுவதற்கு அனுமதிக்கவே கூடாது.

பா.ஜனதாவுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு அளித்தாகி விட்டது. வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிபாக்குவது, பெண்களுக்கு பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி என எல்லாவற்றிலும் தோல்வி. பண மதிப்பிழப்பு செய்த ஒரே காரணத்திற்காக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. ஜி.எஸ்.டி. வரி முறைக்கே கெட்ட பெயரை கொண்டு வந்து பல்லாயிரம் சிறு, குறு தொழிலை முடக்கிய கட்சி. எனவே இந்த தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஜி.எஸ்.டி. 2.0

கேள்வி:- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. 2.0 கொண்டு வரப்படும் என்று சொல்கிறீர்கள். அது பற்றி சொல்ல முடியுமா?

பதில்:- ஜி.எஸ்.டி என்றால் உலகம் முழுவதும் ஒரே வரி தான். இது தான் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கொடுத்த ஆலோசனை. ஆனால் அந்த அறிக்கையை பா.ஜனதா குப்பையில் போட்டு விட்டு இவர்களாகவே, 8 வித வரிகளை கொண்டு வந்து ஜி.எஸ்.டி. என்கிறார்கள். எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி. 2.0 கொண்டு வரப்படும்.

கேள்வி:- அப்படியென்றால் காருக்கும் ஒரே வரி. ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருளுக்கும் ஒரே வரி என்பது சரியாக இருக்குமா?

பதில்: ஜி.எஸ்.டி என்றால் ஒரே வரி தான்.

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது

கேள்வி:- அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கிறார்களே?

பதில்:- தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது. டெல்லியில் ஆட்சி மாற்றம் வந்தால், சில நாட்களிலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும்.

பொருளாதார நிபுணர்கள்

கேள்வி:- உங்கள் கண்ணோட்டத்தில் சொல்லுங்கள், பா.ஜனதா ஆட்சியில் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து இருக்கிறதா?

பதில்:- இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சிக்கு முதற்காரணம் காங்கிரஸ் ஆட்சிகள் தான். இதனை உலகத்தில் உள்ள பொருளாதார நிபுணர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் பா.ஜனதா ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்களிடம் பொருளாதார நிபுணர்கள் கிடையாது. இந்த அரசிடம் வேலை பார்ப்பதற்கு எந்த பொருளாதார நிபுணரும் தயாராக இல்லை.

ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், அரவிந்த் சுப்பிரமனியம் ஆகியோர் விலகிச் சென்றுவிட்டனர். இந்த அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே மந்த கதியில் இருக்கிறது. அந்த மந்த கதியை மறைப்பதற்காக அரசு புள்ளி விவரங்களை திரிக்கிறது. நாட்டில் 7 சதவீத வளர்ச்சி என்று அரசு சொல்கிறதே, ஆனால் அதற்கான அறிகுறியை நான் பார்க்கவில்லை என்று ரகுராம் ராஜன் கூறுகிறார். என்னை பொறுத்தவரை எவ்வளவு மோசமான ஆட்சி இருந்தாலும் வளர்ச்சி இருக்கும். அது மந்தமான வளர்ச்சி.

கேள்வி:- விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்பது...?

பதில்:- விவசாயத்திற்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்று வெளிப்படையாக சொல்வதற்காக தனி பட்ஜெட் போடுவோம். அதில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்று சொல்வோம்.

இவ்வாறு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.

Next Story