பெருங்குடி குப்பை கிடங்கில் கிடைத்த நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
பெருங்குடி குப்பை கிடங்கில் கிடைத்த நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 51). சினிமா இயக்குனர். இவருடைய மனைவி சந்தியா(35). துணை நடிகை.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பாலகிருஷ்ணன், தனது மனைவி சந்தியாவை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டிகளில் வீசினார். இது தொடர்பாக பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜனவரி மாதம் 21-ந் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் 2 கால்கள், ஒரு கையும், பிப்ரவரி மாதம் 6-ந் தேதி ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் அவரது இடுப்பில் இருந்து தொடை வரையிலான உடல் பாகம் கண்டெடுக்கப்பட்டது.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
சந்தியாவின் தலை, உடல், மற்றொரு கை ஆகியவற்றை பெருங்குடி குப்பை கிடங்கில் பல நாட்களாக தேடியும் கிடைக்காததால், உடலை தேடும் பணியை போலீசார் கைவிட்டனர்.
இந்த நிலையில் தங்கள் மகள் சந்தியாவுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டி இருப்பதால், போலீசார் இதுவரை கண்டெடுத்த சந்தியாவின் உடல் பாகங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது தாய் பிரசன்னகுமாரி, தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பள்ளிக்கரணை போலீசில் மனு கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைத்து இருந்த சந்தியாவின் உடல் பாகங்களை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story