தி.மு.க. முன்னாள் அமைச்சரின் நண்பர் வீட்டில் வருமான வரி சோதனை கட்சி அலுவலகத்திலும் ஆய்வு


தி.மு.க. முன்னாள் அமைச்சரின் நண்பர் வீட்டில் வருமான வரி சோதனை கட்சி அலுவலகத்திலும் ஆய்வு
x
தினத்தந்தி 6 April 2019 10:15 PM GMT (Updated: 6 April 2019 7:54 PM GMT)

காங்கேயத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினார்கள்.

காங்கேயம்,

காங்கேயத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினார்கள். பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சரின் நண்பர்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக இருப்பவர் பி.பி.அப்புக்குட்டி (வயது 60). இவர் சொந்தமாக தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் உலர் களம், பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவருக்கு காங்கேயம்-முத்தூர் ரோடு மிதிப்பாறையில் சொந்தமாக வீடு உள்ளது. இவர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று பி.பி.அப்புக்குட்டி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதனுடன் குண்டடம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி. மு.க. வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றிருந்தார். அப்போது மதியம் 12 மணியளவில் கோவையில் இருந்து ஒரு காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் பி.பி.அப்புக்குட்டியின் வீட்டுக்கு சென்றனர். வீடு பூட்டி கிடப்பதை பார்த்து உடனே அவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரவழைத்தனர்.

வருமான வரித்துறை சோதனை

பின்னர் அவர் வீட்டுக்கு வந்தவுடன் உள்ளே சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிப்புறம் வீட்டு கதவை பூட்டினார்கள். அதன்பிறகு வீட்டில் எங்காவது பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா? என தேடினர். அதன்பிறகு பி.பி.அப்புக்குட்டியிடம் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்களை வாங்கி சரிபார்த்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவரை காங்கேயம் டவுன் தாராபுரம் ரோட்டில் களிமேடு என்ற இடத்தில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எதுவும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story