சென்னை ஐகோர்ட்டில் 6 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வரும் 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி முதல் பணியாற்றி வந்தார்.
இவர்கள் 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு செய்த பரிந்துரையை ஏற்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, இந்த 6 கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
நிரந்தர நீதிபதிகளின் வாழ்க்கை குறிப்பு பின்வருமாறு:-
வி.பவானி சுப்பராயன்
தஞ்சாவூர் மாவட்டம், எஸ்.ஜி.வெங்கடராமன்-லட்சுமிகாந்தம் தம்பதிக்கு மகளாக 1963-ம் ஆண்டு மே 15-ந் தேதி நீதிபதி வி.பவானி சுப்பராயன் பிறந்தார். இவர் சென்னை எழும்பூரில் பிரசிடென்சி பெண்கள் பள்ளியிலும், ராணிமேரி கல்லூரியிலும் படித்தார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1986-ம் ஆண்டு வக்கீலானார். அய்யர் அண்டு டோலியா சட்ட நிறுவனத்திலும், மூத்த வக்கீல் என்.நடராஜனிடமும் ஜூனியராக பணியாற்றினார். கணவர் சுப்பராயன் மரணத்துக்கு பின்னர், நீலகிரி மாவட்டத்தில் வக்கீலாக சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில், மத்திய, மாநில அரசுகளின் வக்கீலாக பணியாற்றினார். இவருக்கு நிதிலா ராயன், மிருதுலா ராயன் என்று இரு மகள்கள் உள்ளனர்.
ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா
தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபட்டினத்தை சேர்ந்த இவரது, பெற்றோர் தாசன் பெர்னாண்டோ- மெட்டில்டா. திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேதியியல் துறை தலைவராகவும், துணை முதல்வராகவும் தாசன் பெர்னாண்டோ பணியாற்றினார். நீதிபதி ஜெகதீஷ் சந்திராவின் தந்தை வழி தாத்தா அப்பாவு பெர்னாண்டோ கன்னியாகுமரி மாவட்ட கிராம சபை முன்னாள் தலைவர் ஆவார். தாய் வழி தாத்தா டி.எஸ்.குரூஸ் பெர்னாண்டோ, இலங்கையில் புகழ் பெற்ற தொழிலதிபர் ஆவார்.
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினத்தில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளி, ஆறுமுகநேரி அடுத்துள்ள சாகுபுரத்தில் உள்ள கமலாவதி மேல்நிலைப்பள்ளி, பேயன்விளையில் உள்ள காயல்பட்டினம்-ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்தார். ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ. படிப்பில் சேர்ந்தநிலையில் இவருக்கு சட்டப்படிப்பில் இடம் கிடைத்ததால், மதுரை மற்றும் சென்னை சட்டக்கல்லூரிகளில் சட்டப்படிப்பை முடித்தார். 1989-ம் ஆண்டு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல் பெபின் பெர்னாண்டோவிடமும், பின்னர் தன் தாய் மாமா ஜி.ஆர்.எட்மண்ட் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றினார்.
ஜி.ஆர்.சுவாமிநாதன்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது பெற்றோர் ஆர்.ராஜாராமன்- சந்திரா ஆவர். புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்துவிட்டு, 1991-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். பின்னர் மூத்த வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தியிடம் ஜூனியராக பணியாற்றினார். அதன் பின்னர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
அப்துல் குத்தூஸ்
தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் நீதிபதி அப்துல் குத்தூஸ். இவரது தந்தை ஏ.அப்துல் காதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்தவர். தந்தை வழி தாத்தா எஸ்.கே.அகமது மீரான், வக்கீல் மற்றும் சுதந்திரபோராட்ட தியாகி ஆவார். இவர் 1950-ம் ஆண்டு எம்.பி.யாகவும் பதவி வகித்தார். நந்தனம் பாஸ்டன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பின்னர் சட்ட படிப்பை முடித்து 1993-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல் எஸ்.சம்பத்குமாரிடம் ஜூனியராக சேர்ந்தார். அதை தொடர்ந்து, வங்கிகள் உள்பட பல நிறுவனங்களுக்கு வக்கீலாகவும் பணியாற்றினார்.
எம்.தண்டபாணி
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர் நீதிபதி எம்.தண்டபாணி. இவரது தந்தை டி.வி.எஸ்.மணி, எண்ணெய் மொத்த வியாபாரி ஆவார். தாயார் பவுனம்மாள். சின்னசேலம் அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த நீதிபதி எம்.தண்டபாணி, திருச்சி சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1993-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். பின்னர், மூத்த வக்கீல் கே.துரைசாமியிடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர், தனியாக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்தார். மாநில அரசு வக்கீலாகவும், மத்திய அமலாக்கப்பிரிவு வக்கீலாக பணியாற்றி வந்தார்.
பி.டி.ஆதிகேசவலு
நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவின், பெற்றோர் பி.ஏ.தெய்வசிகாமணி- மணிமேகலை. தந்தை தெய்வசிகாமணி பிரபல வக் கீல் ஆவார். தாயார் மணிமேகலை தலைமை ஆசிரியராகவும், நுகர்வோர் குறை தீர்வு மன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றியவர். நீதிபதி ஆதிகேசவலுவின் தந்தை வழி தாத்தா ஆதிகேசவலு நாயக்கர், சுதந்திர போராட்ட தியாகி. இவர் எம்.எல்.ஏ.வாகவும், சென்னை மாநகராட்சியின் துணை மேயராகவும் பதவி வகித்தவர்.
நீதிபதி ஆதிகேசவலு, சென்னையில் உள்ள எம்.வெங்கடசுப்பாராவ் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், எஸ்.பி. ஓ.ஏ. பள்ளியிலும் படித்தார். பின்னர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து, 1994-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். தந்தையிடம் சில காலம் ஜூனியராக பணியாற்றிய இவர், பின்னர் தனியாக வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
Related Tags :
Next Story