அரசியலை வியாபாரமாக நினைக்காத நல்லவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்
அரசியலை வியாபாரமாக நினைக்காத நல்லவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று கமல்ஹாசன் கூறினார்.
திருப்பூர்,
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பல்லடம், உடுமலை பகுதியில் பிரசாரம் செய்தார். பல்லடம் என்.ஜி.ஆர்.ரோடு, உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திறந்த வேனில் நின்று அவர் பேசியதாவது:-
ஜி.எஸ்.டி. தான் காரணம்
அரசியலை வியாபாரமாக நினைக்காத நல்லவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். அதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். அஸ்திவாரத்தை நாம் பலமாக போட்டுக்கொண்டால் அடுத்த எனது இலக்கு, உங்களுடைய இலக்கு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதை நாம் செய்து காட்ட வேண்டும். 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ள இந்த தொகுதியில் முதலாளிகளும், தொழிலாளிகளும் சண்டையிட்டுக்கொள்ளும் நிலைக்கு காரணம் ஜி.எஸ்.டி. தான்.
இதையெல்லாம் மாற்றுவதற்கு கவுன்சிலில் சென்று முறையிட முடியும். ஆனால் அங்கு சென்று பலர் குரல் கொடுத்தால் முறைப்படுத்த முடியும். அதற்கு இங்கிருந்து எம்.பி.க்கள் கூட்டம் செல்ல வேண்டும். உங்கள் முகத்தை பார்க்கும்போது எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. ஒன்று, இரண்டு பேர் மட்டுமல்ல. அதிகமாகவே வெற்றி பெற போகிறோம்.
நிலத்தை ஆக்கிரமித்து சாலை வேண்டாம்
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இருக்கின்ற வழியை அகலப்படுத்த வேண்டுமே தவிர, வியாபாரிகள் சம்பாதிப்பதற்காக நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க வேண்டாம். எங்களுக்கு போக்குவரத்து வசதிக்காக சாலை வேண்டும். ஏற்கனவே பாதை இருக்கிறது. அந்த பாதையை விரிவுபடுத்துங்கள். புதிதாக லாபம் பார்க்க வேண்டாம். மக்கள் வியர்வையில் லாபம் பார்க்க வேண்டாம். அதற்கான அஸ்திவாரத்தை நீதிமன்றம் நமக்கு போட்டு கொடுத்திருக்கிறது.
விவசாயம் நடந்து வரும் இடத்தை ஆக்கிரமித்து, காண்டிராக்டர்களுக்கு காசு கொடுப்பதற்கு நீங்கள் ஒத்துக்கொண்ட திட்டத்துக்காக எங்களை பழிவாங்காதீர்கள். 8 வழிச்சாலை திட்டத்தில் நம் மீது ஏறி நின்று ஒதுங்குமாறு கூறினார்கள். இப்போது அவர்களை ஒதுங்க வைத்துள்ளது நீதி.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story