என்னை வெற்றி பெற செய்தால் மக்களுக்கு இரட்டிப்பு யோகம் மத்தியசென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்குறுதி


என்னை வெற்றி பெற செய்தால் மக்களுக்கு இரட்டிப்பு யோகம் மத்தியசென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்குறுதி
x
தினத்தந்தி 9 April 2019 3:45 AM IST (Updated: 9 April 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

“என்னை வெற்றி பெற செய்தால் மக்களுக்கு இரட்டிப்பு யோகம் கிடைக்கும்”, என்று மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை, 

மத்தியசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மண்ணடி பகுதியில் நேற்று ‘உதயசூரியன்’ சின்னத்தில் அவர் வாக்குகள் சேகரித்தார். அவருக்கு ஆதரவாக பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.வும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தின்போது தயாநிதி மாறன் பொதுமக்களிடம் பேசியதாவது:-

உண்மையான துரோகிகள்

இடர்பாடான இச்சூழ்நிலையிலும் சென்னையின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உதவுவது, தி.மு.க. கொண்டு வந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டமே. தொலைநோக்கு சிந்தனையோடு இத்திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது.

தி.மு.க.வை துரோகிகள் என்று அ.தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையான துரோகிகள் அ.தி.மு.க.வினர் தான். சசிகலாவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார். ஆனால் பதவிக்கு வந்ததும் அவரை ஒழித்து கட்டி, தனது துரோக கணக்கை தொடங்கியவர் தான் எடப்பாடி பழனிசாமி.

இரட்டிப்பு யோகம்

கருணாநிதி மறைந்தபோது, அவரது உடல் அடக்கம் செய்ய மெரினாவில் 6 அடி நிலம் கூட தர அ.தி.மு.க. முன்வரவில்லை. நீதிமன்றத்தை நாடி மு.க.ஸ்டாலின் அதை மாற்றினார். இதையெல்லாம் மக்கள் மறந்துவிடக்கூடாது.

என்னை நீங்கள் எம்.பி.யாக தேர்வு செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ள குழாய்களை தேடி தண்ணீர் வரும். தண்ணீர் லாரிகளுக்கு ‘டாட்டா’ சொல்லலாம். துறைமுகம் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. தான் உள்ளார். இந்தநிலையில் என்னை நீங்கள் எம்.பி.யாக தேர்வு செய்யும் பட்சத்தில், இத்தொகுதியில் தி.மு.க. எம்.பி.யும் கிடைப்பார். அது இத்தொகுதி மக்களுக்கு இரட்டிப்பு யோகமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story