“ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கேட்டு வாங்குங்கள்” ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
கொள்ளயடித்த பணத்தை தான் வாக்குக்கு கொடுப்பதாகவும், ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கேட்டு வாங்குங்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
தேனி,
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர், நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் பணத்தை நம்பியே போட்டியிடுவதை பார்க்க முடிகிறது. பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க நினைக்கின்றனர்.
ரூ.5 ஆயிரம் கேட்டு வாங்குங்கள்
ஓட்டுக்கு அ.தி.மு.க.வினர் ரூ.500 வீதம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். நீங்கள் அந்த ரூ.500-ஐ வாங்காதீர்கள். ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டுப்பெறுங்கள். அது உங்களின் பணம் தான். மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தான் வாக்குக்கு கொடுக்கிறார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுவிடுங்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் வெற்றி பெற்ற பின்னர், மக்கள் அடிப்படை தேவைக்காக கோரிக்கை வைத்தால் அதை செய்வதற்கு பணத்தை திருப்பிக்கேட்பார்கள். என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களின் பிரச்சினைகளை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story