‘களைப்படையாமல் விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம்பக்கமே’ தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


‘களைப்படையாமல் விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம்பக்கமே’ தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 April 2019 11:00 PM GMT (Updated: 10 April 2019 7:42 PM GMT)

களைப்படையாமல் விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம்பக்கமே என்று தி.மு.க.வினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான் மட்டுமல்ல, கட்சியினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் எழுச்சியையும், விழிப்புணர்ச்சியையும் காண முடிகிறது. மக்களின் மனநிலை என்ன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென வெளிப்படுத்திடும் வகையில் தேர்தல் களம் அமைந்துள்ளது. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு பேராதரவு பெருகி வருகிறது. ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகளிலும் அது நன்றாகவே பிரதிபலிக்கிறது.

நாம் கருத்துக் கணிப்புகளை மட்டுமே நம்பியிருப்பவர்கள் அல்ல. களத்தில் இறங்கி கண் அயராமல் செயல்படுபவர்கள். பாடுபட்டு வளர்த்த பயிரை, அறுவடை நேரம் வரை கவனமுடன் பாதுகாத்தால்தான், வெற்றி எனும் விளைச்சலைக் காண முடியும். சற்று அசந்தாலும் அது களவாடப்படக்கூடும். ஏனென்றால் வேலியே பயிரை மேய்கின்ற காலம் இது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, கட்சியினர் சற்று அலட்சியமாக இருந்ததால் வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை தி.மு.க. கை நழுவ விட்டது. நம் உயிரனைய தலைவர் கருணாநிதி 6-ம் முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பேற்கும் வரலாற்றுச் சாதனைக்கு வாய்ப்பின்றிப் போனது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறவைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். தி.மு.க. நிர்வாகிகள் அதற்கு முழுமையான ஆயத்தத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திடவேண்டும். விளைந்து நிற்கின்ற வெற்றிக்கதிரை அறுவடை செய்து களத்து மேட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், விழிப்புடன் இருந்து செயலாற்றிட வேண்டும்.

கொக்குப்போல...

மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கும் அவர்களுடைய கூட்டணியில் இருப்போருக்கும் இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது என்பதை அவர்களின் தேர்தல் பிரசார பேச்சுகளிலிருந்தே நாமும் உணர்கிறோம். மக்களும் உணர்ந்து கொண்டார்கள்.

இத்தனை சூது வளையங்களையும், சூழ்ச்சி வலைகளையும் அறுத்தெறிந்துதான், நாம் மக்களின் வாக்குகளை பெறவேண்டும். உறுதியாகிவிட்ட தி.மு.க. கூட்டணியின் வெற்றியை அதிகார அத்துமீறல் கரங்களால் பறிக்க நினைக்கும் ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களின் கூட்டணியினரிடமிருந்தும் கவனமாகக் கண்ணென பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க. நிர்வாகிகளுக்கு இருக்கிறது. எந்த ஒரு வாக்காளரும், எங்களை தி.மு.க. சந்திக்கவில்லை என்று சொல்ல முடியாத அளவில் உங்கள் பணி முழுமையாக அமையவேண்டும்.

அதுபோலவே, ஆட்சியாளர்கள் கடைசி நேரத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள அதிகார அத்துமீறல்களை கண்டறிவதில் கொக்குபோல தி.மு.க.வினர் செயலாற்றவேண்டும்.

முழுமையான வெற்றி

நாடும் நமதே நாற்பதும் நமதே; இருபத்தி இரண்டும் எமதே என்பதே நமது இலக்கு. ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கண் இமைக்காமல், பசி நோக்காமல் களைப்படையாமல் விழிப்புடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் நம் பக்கமே. வெற்றியை தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அதனை பெற்று, வங்கக் கடற்கரையில் நிரந்தர ஓய்வெடுக்கும் நம் தலைவர் கலைஞரின் காலடிகளில் காணிக்கையாக்கும் பொறுப்பு அந்த உயிர்நிகர் தலைவரின் உடன்பிறப்புகளான உங்களின் கைகளில்தான் இருக்கிறது. ‘வெட்டி வா’ என்றால் கட்டிவரக்கூடியவர்கள் எனது உடன்பிறப்புகள் எனப் பெருமையுடன் சொல்வார் கலைஞர். அந்த பெருமைக்குரிய உடன்பிறப்புகளிடம் உங்களில் ஒருவனாக நான் எதிர்பார்ப்பது 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும், முழுமையான வெற்றி ஒன்றைத்தான். களத்தில் செயலாற்றுவீர் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை உறுதியாக நிலைநாட்டுவீர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story